என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 11 அக்டோபர், 2010

இணையச் சமூக வலையமைப்பாமே.. ஏதாவது விளங்கிச்சா உங்களுக்கு?

இணையம் என்றால் Internet என்று எமக்குத்தெரியும். இந்தச் "சமூக வலையமைப்பு' (Social Networking) என்ற சொல்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கு இல்லையா?
இந்தப் படத்தைப் பாருங்கள். கொஞ்சப்பேர் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருத்தருக்கு மற்றவர் நண்பர், இன்னொருவர் காதலர், மற்றுமொருவர் உறவினர் என்றவாறு தொடர்புகள்.



இந்தத்தொடர்புகள் ஒரு வலை போல சமூகத்தில் வியாபித்துள்ளது. நாமனைவரும் ஒருவருக்கொருவர் உறவின் வலையமைப்புக்களைக்கொண்டுள்ளோம். அந்த வீட்டுக்குள் இருப்பவரது வலையமைப்பு சிறியது அங்கே இரண்டு பேருக்கிடையில் மட்டும் தான் உறவு. வெளியில் உள்ள வலையமைப்போடு அவருக்கு தொடர்பில்லை. ஒருவேளை அவர் ஜன்னலால் எட்டிப்பார்த்து அங்குள்ள ஒரு பெண்பிள்ளை இவரைப்பார்த்து புன்னகைத்துவிட்டால், சிலவேளை அவர் பெரிய வலையமைப்புக்குள் ஒரு பகுதியாக சேர்ந்துவிடுவார். 

பாடசாலைகளில், டியூசன் வகுப்புக்களில், விளையாடுமிடத்தில், இலக்கியக்கூட்டங்களில் என்று எமக்கு வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு வலையமைப்புக்கள் இருக்கும். இவை தரையில் உண்மை வாழ்க்கையில் எமக்கிருக்கும் சமூக வலையமைப்புக்கள்.

தரையிலுள்ள இந்தச் சமூக வலையமைப்பு சில போதாமைகளையும் சிக்கல்களையும் கொண்டுள்ளது.

நாம் சந்திக்கக்கூடிய வட்டங்களுக்குள்தான் ஆட்களுடனான தொடர்புகளும் எமக்கு இருக்கும். கியூபாவில் இருக்கும் ஒரு கவிஞருடன் உங்களுக்குத் தொடர்பிருக்காது.

அப்படியே சந்திகக்க்கூடியதாயிருந்தாலும் பல தயக்கங்களும் தடைகளும் இருக்கும். பக்கத்திலிருக்கும் அழகான ஆணுடன் பேச ஆசைப்படும் ஒருத்தி, எப்படித்தொடங்குவதென்ற யோசனையிலேயே ஆளைத் தவறவிட்டுவிடுவாள்.

ஒளிப்படத்துறையில் ஆர்வமுள்ள உங்களுக்கு பேரூந்தில் பக்கத்தில் தூங்கும் கிழவி மிகச்சிறந்த ஒளிப்படக் கலைஞர் என்பது தெரியவர வாய்ப்பே இருக்காது. 

கச்சிதமாய் வீணை வாசித்த அந்தச் சிறுவனை வியந்து கைகுலுக்கி தொலைபேசி எண்ணையும் முகவரியையும் கூட வாங்கிக்கொள்கிறீர்கள். நாலு நாளில் அவன் உங்களை மறந்துபோய்விடுவான். என்ன காரணம் சொல்லி தொலைபேசுவது, எப்படி வீடுக்குப்போவது என்று கொஞ்ச நாளைக்கு யோசித்துவிட்டு பிறகு நீங்களும் அவனை மறந்துபோய்விடுவீர்கள்.


இப்படி சமூகத்தின் மனிதர்களோடு தொடர்பாடுவதிலும் உறவுகளை ஏற்படுத்துவதிலும் நட்பினைத் தொடர்வதிலும் எமக்கு ஏராளம் தடைகள் இருக்கின்றன.

இந்தத்தடைகளை தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக உருவாகிய புதிய வசதிகள் காலத்துக்குக்காலம் குறைத்து வந்துள்ளன.

எமது ஊர்களில் செல்பேசிகளின் வருகையும் அவை பரவலாக எல்லார் கைகளிலும் புழங்கத் தொடங்கியதும் இளைஞர்களிடையான நட்பு வலையமைப்பில் எத்தகையதொரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறதென்பதை நீங்கள் சிலவேளை நேரில் பார்த்து உணர்ந்திருப்பீர்கள்.


பழைய கால வீட்டுத்தொலைபேசிகளுக்கு எடுத்து அம்மாக்களிடமும் அப்பாக்களிடமும் ஆயிரம் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல், கதைப்பதற்கான தயக்கம் இருந்தால் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியே மிக வேகமாகவும் அழகாகவும் எம்மால் "வலையமைப்புக்களைக்" கட்ட முடிந்தது.

இந்தச்சூழலில் இணையம் எம் வாழ்வில் மெல்ல நுழைந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

மின்னஞ்சல்களாக, Yahoo, MSN Messengerகள் வழியான அரட்டையாக எமது சமூகத் தொடர்புகள் இணையத்துக்கு மாறத்தொடங்கின. நாம் கடலையைக் கடல் தாண்டிப் போடத்தொடங்கினோம் ;-)
கடல்கடந்த மனிதர்களுடன் மின்னஞ்சல்கள் வழியாகவும் இணைய அரட்டையின் மூலமும் நாம் தொடர்புகளைப் பேணிக்கொண்டோம். காதலர் தினம் படத்தில் இணைய வலையமைப்புக்கள் தொடர்பான "ஓ மரியா.." பாட்டெல்லாம் இந்தக்காலங்களில் தான் வந்தது.

அந்தப்பாட்டும் சரி எனது இந்தக்கட்டுரையின் பெரும்பகுதியும் சரி சமூக வலையமைப்பு என்பதே பெரியதொரு "கடலை போடும்" கட்டமைப்பு என்றமாதிரி குறுகிய வக்கிரமான புத்தியோடு சொல்லுகின்றன. புத்திசாலி வாசகராகிய நீங்கள் இந்த வலையமைப்புக்களின் வியாபகமான உன்னதமான பல்வேறு சாத்தியங்களைக் கட்டாயம் உணர்ந்திருப்பீர்கள்.


ஆனால் ஆரம்பகால இணையத்தின் இந்தச் சமூக வலையமைப்பு வசதிகளிலும் நிறையப்பிரச்சினை.

ஆட்களைத்தெரியவேண்டும், ஆட்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவேண்டும், அரட்டைக்கு ஆள் வரவேண்டும், வந்தாலும் வந்த ஆள் பொய்யோ மெய்யோ யாருக்கும் தெரியாது.. இப்படி பிரச்சினைகள்.

முக்கியமாக, நீங்கள் யார் என்பது மற்றவர்களுக்குத்தெரிந்தால்தானே தொடர்புகள் உருவாகும்? மற்றவர்களின் விருப்பங்கள், திறமைகள், இயல்புகள் தெரிந்தால்தானே நீங்களும் தொடர்புகொள்வீர்கள்.? மற்றது உருவாகும் தொடர்புகளை தொடர்ச்சியாக பேணி வைத்திருக்கவும் வேண்டுமல்லவா?

இப்படியான பிரச்சினைகள் அக்காலத்தில்

காலம் உருண்டோடியது.

இணையப் பாவனை மெல்லமெல்லப் பரவலாக ஆரம்பித்தது. நாம் இணையத்தில் மினக்கடும் நேரம் அதிகரித்தது. எமது பணிகள் இணையத்தைச் சார்ந்திருக்கத்தொடங்கின.

எமது பொழுதுபோக்குக்கள் Youtube, Raaga வடிவிலும், எமது எழுத்துக்கள் வலைப்பதிவுகளாகவும், எமது தொடர்புகள் மின்னஞ்சல்களாகவும், செய்திகள் செய்தித்தளங்களாகவும், எமது விளையாட்டுக்கள் இணையத்தள விளையாட்டுக்களாகவும், எமது ஒளிப்படங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்புவதாயும் ஆகிப்போயின. நாம் இணையத்தோடு எம்மைப் பிணைத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.

இதற்கேற்றாற்போல் இணைய வேகமும் அதிகரித்தது. இணையத்தைப் பயன்படுத்துவோரும் அதிகரித்தனர். எங்கள் மொழியில் தங்குதடையின்றி இணையத்தைப் பயன்படுத்த, எங்கள் மொழியிலேயே இணையத்தில் எழுத வசதிகளும் வந்து சேர்ந்தன.

இந்தப்புறநிலை இணையத்தில் Myspace போன்ற சமூக வலையமைப்புத்தளங்கள் உருவாவதற்கான உந்துதலைக்கொடுத்தது.

மனிதர்களுக்கு மற்ற மனிதர்களுடனான தொடர்பில்லாமல் உயிர்வாழ முடியாது. மனிதர் சமூக வலையமைப்பில் தங்கி வாழும் அங்கி. இணையத்தில் கடல் கடந்து மொழிகடந்து மக்களுடன் வலையமைப்புக்களை உருவாக்குவதற்கான உந்துதல் இணையம் காரணமாக எல்லோரிடமும் உருவாகிவிட்டிருந்தது. ஆனால் இணையத்தில் எல்லோரும் அடையாளமற்று அலைகின்றனர். எப்படி ஆட்களைத் தெரிந்துகொள்வது? எப்படித் தொடர்புகொள்வது?

இந்த இடத்தில்தான் மக்களின் தேவைகள் சமூக வலையமைப்பு வலைத்தளங்கள் உருவாக உந்தியது.

இது இணைய வணிகத்திலும் பிரபலத்திலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது.

சமூக வலையமைப்பு வலைத்தளங்கள் சில முக்கிய அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அந்த அடிப்படை விசயங்கள்தான் இணையச் சமூக வலையமைப்பின் பாரிய வெற்றியாயும் அமைந்தன. அவற்றுள் ஐந்தினை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. தனிப்பட்ட விபரம் : Personal Profile

ஒவ்வொருவரும் தமது படம், விருப்பங்கள், தகவல்கள் அடங்கிய "விபரத்தை" இணையத்தில் பொதுவான இடத்தில் வைத்திருக்க இந்த வலைத்தளங்கள் உதவின. உண்மை உலகில் நாம் அட்டையொன்றில் எம்மைப்பற்றி எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு திரியமுடியாதல்லவா? அந்தப்பிரச்சினைய இணையம் தீர்த்துவைத்தது.


2. நட்பு அழைப்பு : Friend Request

"விபரங்களை" பார்வையிட்டபின்பு, ஆளை எமக்கு பிடித்திருந்தால் அவருக்கு "வாங்க பழகலாம்" என்ற அழைப்பை விடுக்கும் வசதி அறிமுகமானது. சாதாரணமாக தெருவில் கும் ஒருவருக்கு முன்னால் திடீரென்று போய் நின்று கொண்டு வாங்க பழகலாம் என்று அழைப்ப்பது சாதாரண செயல் அல்ல. ஆனால் இணையத்தில் இவ்வாறான நட்பு அழைப்பு சாதாரண செயலாக ஆகிப்போனது.

3. நண்பர் வலையமைப்பு : Friends Network

ஒருவருக்கு நீங்கள் விடுத்த "நட்பு அழைப்பு" ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவரது நண்பர் வட்டத்தினுள் நீங்களும் உங்கள் நண்பர் வட்டத்தினுள் அவரும் இணைவதற்கான சாத்தியம் கிடைத்தது. இது நண்பர்களின் வலையமைப்பொன்றை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள உதவியது. அந்த வலையமைப்பினுள் கதைக்க, நக்கலடிக்க, சிரிக்க வாய்ப்புக்கிடைத்தது. 

4. கோப்புக்களைப் பகிர்வது : File Sharing

இப்படி கூடிய நண்பர்கள் தமக்கிடையே தமது படங்களை, கருத்துக்களை, பாடல்களை, வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதிகளை இந்தத்தளங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பருடனும் நொடிப்பொழுதில் இவ்வாறான கோப்புக்களை நாம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம். இது சமூக வலையமைப்பு வலைத்தளங்களை மேலும் மேலும் அத்தியாவசியமானவையாக மாற்றியது.

5. நடப்புக்களைப் பகிர்வது : Status Update

இணையச் சமூக வலையமைப்புக்கு அண்மையில் அறிமுகமாகி சக்கை போடும் ஒரு புதிய செல்நெறி (Trend) இது. இதைப்பற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம் அந்தளவு ஆர்வமூட்டும் வியம் இது. சுருக்கமாகச்சொன்னால், யாரையும் நாங்க தெருவுல் கண்டால் கேட்பதில்லையா, "என்ன கதை மச்சான்" என்று அல்லது "பிறகு எப்பிடி?" என்று...

இந்தக்கேள்விகள் சமூக வலையமைப்பின் அடிநாதம். ஆங்கிலத்தில் What's up என்போம். இந்தக்கேள்வியை யாரும் அடிக்கடிக் கேட்காமலே சமூக வலையமைப்புத்தளங்களில் நாமாக அவ்வப்போது இந்தக்கேள்விக்கான பதில்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதுதான் இந்த "நடப்புக்களைப் பகிரும்" விசயம்.

நாம் என்ன சிந்திக்கிறோம் என்பதை, என்ன வாசிக்கிறோம் என்பதை, எம்மை இந்தக்கணம் பாதித்த தகவல்களை, பிடித்த பாடலை, இப்போதுதான் கேள்விப்பட்ட செய்தி ஒன்றை நாம் இவ்வாறாக பகிர்ந்துகொண்டிருப்போம். மற்றவர்களும் பகிர்வார்கள். எமது வலையமைப்பினுள் அனைவரது நடவடிக்கைகளையும் இதன் மூலம் நாம் அறிந்தவண்ணமிருப்போம். இது நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. கூடவே ஒவ்வொரு பகிர்வுக்கும் நாம் எமது கருத்தை, மறுமொழியை சொல்வோம். இதனால் உரையாடல் விரிகிறது.

இந்த விசயம் தான் இன்று Twitter , Facebook போன்ற அதி உச்சப் புகழ் பெற்ற சமூக வலையமைப்புத் தளங்களின் பாரிய வெற்றியாக மாறியிருக்கிறது.

இணையச்சமூக வலையமைப்பை மேலும் மேலும் விரிவாக்கவும் நெருக்கமாக்கவுமான ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணமிருக்கின்றன. இணையச்சமூக வலையமைப்புத் தளங்களும் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன.


இவ்வாறான இணையச் சமூக வலையமைப்புக்களின் மறுபக்கம் பற்றியும் பார்த்துவிடுவது நல்லது.

வரவர மனிதர்கள் வீடுக்ளுக்குள்ளும் அறைகளுக்குள்ளும் கணினியோடு முடங்கிவிடும் போக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உண்மையான மனிதர்களை நேரில் சந்தித்து உயிர்ப்பான சமூக உறவுகளைப் பேணுதல் எனும் ஆரோக்கியமான போக்கு மறைந்து மின்வடிவ நண்பர்களுடனும் மின்வடிவ உறவாடலுடனும் தனித்து ஒடுங்கிப்போகும் நிலையை இந்தச்செல்நெறி தோற்றுவிக்கப்பார்க்கிறது.

இணையத்தின் வலையமைப்புக்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி சமூகப்பயனுள்ள பணிகளைச்செய்யாது வெறுமனே பயனற்ற வெட்டிப் பேச்சுக்களுக்கும் பொழுதுபோக்குக்களுக்கும் முன்னுரிமையளிக்கும் நிலை பெருகி வருகிறது.

சமூக வலையமைப்புத் தளங்களை நடத்தும் நிறுவனங்கள் தம்மை அண்டிப்பெருகும் பாவனையாளர்களின் சொந்தத்தகவல்களை விற்பனைச்சரக்காக்கி விற்று லாபம் பார்க்கும் யதார்த்தம் பெரும் விமர்சனத்தை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.

தமக்கு நன்மையளிக்கக்கூடியது எது தீமைதரக்கூடியதெது என்று பிரித்தறியும் ஆளுமை கைவரப்பெறாத சிறுவர்களும் மற்றவர்களும் இவ்வலையமைப்புக்கள் தரும் அளவற்ற சுதந்திரத்தைப்பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும் வேறு வழிகளாலும் சுரண்டப்படுவதற்கும் தவறாக வழிநடத்தப்படுவதற்கும், அச்சுறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

சமூக வலையமைப்புத் தள நிர்வாகிகளுடனான ஒப்பந்தங்கள் மூலம் அரசாங்கங்களும், அதிகார நிறுவனங்களும் எம்மைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வாய்ப்பும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. இது தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப்பாதிப்பதுடன் எம் சொந்த விசயங்களின் அதிகாரங்கள் தேவையற்று கண்காணிப்பையும் தலையீடுகளையும் செய்ய வழிசெய்துகொடுக்கிறது.

தொழிநுட்ப வளர்ச்சியும் சமூகப்புறநிலைகளும் உருவாக்கியிருக்கும் இணையச் சமூக வலையமைப்பு என்ற செல்நெறி இன்று அடிக்கடிப்பேசப்படுவதும் நம்மில் பலர் பங்கெடுப்பதுமாகும். 

அது தொடர்பான ஆழ அகலங்களியும் நன்மை தீமைகளையும் அறிந்துவைத்திருப்பதுடன், இவ்வலையமைப்புக்களை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டடைவது எல்லோருக்கும் நன்மை தருவதாகும்.