சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்
தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது.
அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது.
இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.
லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க 15 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளை சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்ந்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மையத்தை உருவாக்குவதன் மூலம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியை 3.5 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது தற்போது செய்யப்படும் ஏற்றுமதியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.
மென்பொருள் மையமாக உருவாக்கப்படவுள்ள இந்த துணை நகரத்தில் உண்மையில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவையும் இடம்பெறும் என்று இந்த கட்டுமானப் பணிக்கு முதலீடு செய்து வரும் ஹாங்காங் நிறுவனமான ஷூய் ஒன் குழுமத் தலைவர் வின்சென்ட் லோ தெரிவித்தார்.
தரைத் தளப் பரப்பளவு மட்டும் 4 மில்லியன் சதுர மீட்டர்கள் கொண்ட இந்த கட்டுமானப்பணி முடிய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிகிறது.
முதல் கட்ட நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவுள்ளது. ஆனால் முக்கிய இலக்கு ஐ.பி.எம் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை மேம்படுத்துவதாய் இருக்கும் என்று தெரிகிறது.
வடகிழக்கு ஆசியாவிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏற்றுமதி மையமாக இந்த டாலியான் மையம் திகழும் என்று சீன தகவல் தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், டாலியான் நகரில் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் வேஃபர் ஃபேப்ரிகேஷன் மையம் (Wafer Fabrications Facility) ஒன்றை கட்டுவதற்கான பணியை ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலியானில் சத்யம் நிறுவனத்திற்கு ஏற்கனவே மையம் உள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் ஒரு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் சவாலை சமாளிக்க சீனா வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.