என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 3 பிப்ரவரி, 2011

வவுனியாவில் கடும் மழை மக்கள் பாதிப்பு


(படங்கள் இணைப்பு)
கடந்த மூன்று தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பிரதேசத்;தில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
அதிலும் குறிப்பாக நேற்று பிற்பகல் தொடங்கிய கடும் மழை இரவு 7 மணிவரை நீடித்ததனால், பாலமோட்டை, பெரியதம்பனை, சேமமடு, வீமன்கல்லு போன்ற கிராமப் பிரதேசங்களில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடும் மழையினால் மழை நீர் கூடாரங்களுக்குள் வந்ததுடன், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பழைய கூடாரங்களில் நீர் கசிந்து கூடாரத்தினுள் வைக்கப்பட்டிருந்த தமது உடைமைகள் யாவும் நனைந்து விட்டதுடன், இரவு சமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாகவும் பெரியதம்பனை பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
பெரிய தம்பனை கிராமத்தின் கோவில்கள், பாடசாலை என்பன யுத்தத்தினால் அழிவுக்குள்ளாகி கூரைகள் அற்ற நிலையில் இருப்பதனால், 200க்கும் மேற்pபட்ட இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பொது இடங்களில் தஞ்சம் புகுவதற்குக் கூட வழியின்றி தவிக்க நேர்ந்துள்ளது.
 
தங்கள் ஊரில் உள்ள ஒரேயொரு பொதுக்கட்டிடமாகிய கிராம சேவை அலுவலகத்தின் சிறிய இடத்திலேயே இரவு முழுதும் கைக்குழந்தைகள் சிறுவர்களுடன் நித்திரையின்றி பொழுதைக் கழித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை தங்கள் காணிகளுக்குத் திரும்பி இந்தக் குடும்பங்கள் தகரத் தண்டுகளைப் பயன்படுத்தி ஈர நிலத்தில் அடுப்புமூட்டி தேநீர் தயாரித்ததாகவும் சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
 
இன்று காலையும் வானம் மப்பம் மந்தாரமாகவும் இருப்பதாகவும் இன்றும் நேற்றைய தினத்தைப்போன்று கடும் மழை பெய்யுமானால், ஏற்கனவே நனைந்து தோய்ந்துள்ள தமது உடைமைகளைப் பாதுகாக்க முடியாமல் போகலாம் என்றும் தங்களுக்கு ஒதுங்குவதற்கு உரிய இடமில்லாமல் பெரும் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.
 
தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மாரி மழையில் மீள்குடியேற்றப்பகுதியில் உள்ள மக்களின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மீள்குடியேற்றப் பிரதேசங்களில் தற்காலிகக் கொட்டில்களுக்கான கூரைத்தகடுகள் வழங்கப்படாத குடும்பங்களின் நிலைமை குறித்து தாங்கள் கரிசனையோடு அவதானித்து வருவதுடன், இவர்களுக்குத் தேவையான கூரைத்தகடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
அத்துடன் அவசரத் தேவைக்கு விநியோகிக்கக் கூடியதாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 
அடை மடை மற்றும் பெரும் மழை பெய்யும்போது மீள்குடியேற்றப் பிரதேசங்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்காக யுஎன்எச்சிஆர் நிறுவனத்தினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு அவர்களிடம் கோரப்பட்டுள்ளதாகவும், அவசர நிலைமைகள் ஏற்படும்பட்சத்தில், அந்தத் திட்டத்திற்கமைய மக்கள் பராமரிக்கப்படுவார்கள் என்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.