“புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய்… அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.”
-பார்த்து படிக்கும்போதே தடங்கல் இல்லாமல், தவறாக உச்சரிக்காமல் இதனை எத்தனை பேரால் சரியாக வாசிக்க முடிந்தது? நம்மில் பலருக்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். ஆனால் இதனை தன் கம்பீரக் குரலில் ஒரே மூச்சில், ஏற்ற இறக்கத்துடன் பேசி, ரசிகர்களையும் திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘மனோகரா’ படத்திற்காக கலைஞர் எழுதிய வசனம் இது.
விழுப்புரம் சின்னையா கணேசன் (வி.சி.கணேசன்) 1928 அக்டோபர் 1ந் தேதி பிறந்தவர். 10 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சிறுவனாக இருக்கும்போதே நீளமான வசனங்களை அனாயசமாகப் பேசி அசத்தினார். அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்த காலம் அது. மராட்டிய மன்னன் சிவாஜி, போர்க்களத்தில் வென்றபிறகும் பதவியேற்க முடியாமல் தடை விதித்தார்கள் உயர்சாதியினரான பிராமணர்கள் என்ற வரலாற்று ஆதாரத்தின் அடிப்படையில் ‘சந்திரமோகன்’ அல்லது ‘சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதினார். அதில், நடிப்பதாக இருந்த எம்.ஜி.ஆர் நடிக்க இயலாத சூழலால். வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்ற போதுதான், வி.சி.கணேசன் அதற்கு முன்வந்தார்.
நாடகம், சினிமா இவையெல்லாம் புராண-மூடநம்பிக்கைக் குப்பைகளின் நவீன வடிவமாக இருக்கிறது என எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியாரே, மாறுபட்ட நாடகமான சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம் நாடகத்தைப் பார்த்தார். ரசித்தார். சிவாஜியாக நடித்த கணேசனைக் கூப்பிட்டு, “அப்படியே சிவாஜிமாதிரியே நடிச்சிருக்கே” என்று பாராட்டினார். அன்றுமுதல், வி.சி.கணேசன், சிவாஜி கணேசனாகி பின்னர் சிவாஜி என்றே புகழ்பெற்றார். கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரும், ஏ.வி.எம் நிறுவன அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் இணைந்து தயாரித்த படம் ‘பராசக்தி’. இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறுபடங்கள் இருந்த நிலையில், சிவாஜி அந்த பாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒல்லியான உருவத்தில் இருந்த அவர் சரியாக இருப்பாரா என ஏ.வி.எம்முக்கு சந்தேகம். நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரும் கலைஞரும் சிவாஜியின் நடிப்பாற்றலை எடுத்துச்சொல்லி அவரை சமாதானப்படுத்தினார்கள். 1952ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘பராசக்தி’யில் சிவாஜி பேசிய வசனங்கள் சரப்பட்டாசாக வெடித்தன. தமிழ்த் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது கலைஞர்+சிவாஜி கூட்டணியில் அமைந்த பராசக்தி. சிவாஜி என்ற மாபெரும் கலைஞனின் நடிப்பாற்றல் கண்டு தமிழக ரசிகர்கள் வியந்தனர்.

தமிழ்த் திரையில் நடிப்பு என்பது சிவாஜிக்கு முன்.. சிவாஜிக்குப் பின் என மாறியது. பராசக்தியில் தொடங்கி படையப்பா வரை சுமார் 300 படங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். அவற்றில் சில வணிகரீதியில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால், எந்தப் படத்திலும் சிவாஜியின் நடிப்புக்குத் தோல்வியே கிடையாது. இயக்குநர்களும் படத்தயாரிப்பாளர்களும் எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகவே அவருடைய திறமை வெளிப்படும்.
அண்ணன் என்றால் ‘பாசமலர்’ சிவாஜி, அப்பா என்றால் ‘தெய்வமகன்’ சிவாஜி, மகன் என்றாலும் ‘தெய்வமகன்’ சிவாஜிகள்தான். கணவன் என்றால் ‘வியட்நாம் வீடு’ சிவாஜி. காதலன் என்றால் ‘வசந்தமாளிகை’ சிவாஜி. இப்படி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய நடிப்பாற்றல் தனித்துவத்துடன் வெளிப்படும். டாக்டர் என்றால் ‘பாலும் பழமும்‘ படம் நினைவுக்கு வரும். வக்கீல் என்றால் ‘கௌரவம்’ படத்தைத் தாண்டி இன்னொன்று நினைவுக்கு வராது. காவல்துறை உயரதிகாரி என்றால் ‘தங்கப்பதக்கம்’ படத்தை மிஞ்ச இன்னொன்று கிடையாது. லாரி டிரைவராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் சிவாஜியைக் கடந்து இன்னொரு நடிகரை சட்டென யோசிக்க முடியாது. சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதசுரக் கலைஞராக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாழ்ந்திருப்பார் சிவாஜி. ஏழையின் துன்பமா, பணக்காரனின் ஆடம்பரமா எல்லாவற்றையும் தன் படங்களில் அச்சு அசலாகப் பிரதிபலித்தவர் அவர்தான்.
இவையெல்லாவற்றையும்விட பாமர மக்களின் ஊடகமான சினிமா மூலமாக வரலாற்று நாயகர்களையும் புராண மாந்தர்களையும் நினைவுபடுத்தி நெஞ்சில் நிறைந்தவர் சிவாஜியே. வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதியார், ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், பகத்சிங், திருப்பூர் குமரன், சாக்ரடீஸ், கர்ணன், பரமசிவன், காத்தவராயன், அப்பர், சுந்தரர், ஹரிச்சந்திரன் என அவர் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். திருமால் எடுத்ததாகச் சொல்லப்படும் அவதாரங்களைவிட, திரையில் சிவாஜி பூசிய அரிதாரங்களும் அது மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கங்களும் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கின்றன.

தமிழ்த் திரையின் முக்கிய இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு, ஏ.பி.நாகராஜன், பீம்சிங், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தாதாமிராஸி, கே.சங்கர், பி.மாதவன், கே.விஜயன் ஆகியோருக்கு சிவாஜி ஒரு வரப்பிரசாதமாக இருந்தார். தங்கள் கலைப்படைப்பை மெருகேற்ற சிவாஜியைத் தவிர இன்னொரு கலைஞனை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதபடி அவருடைய நடிப்பு இருந்தது. தன்னைவிட மூத்த நடிகர்களான எம்.ஆர்.ராதா, நாகைய்யா, பாலைய்யா ஆகியோருடனும் அவருடைய நடிப்பு போட்டிபோடும். தனக்குப் பின் திரைக்கு வந்தவர்களான ஜெமினிகணேசன், முத்துராமன், மேஜர் சுந்தர்ரராஜன், பாலாஜி ஆகியோருக்கும் அவரது நடிப்பு, பாடம் சொல்லிக் கொடுக்கும்.
சிவாஜிக்கு ஜோடியாக நடித்த பத்மினி, பானுமதி, சரோஜாதேவி, சாவித்திரி, ஜெயலலிதா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, சுஜாதா என எல்லோருமே மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைக் காட்டிலும் சிவாஜியுடன் நடிக்கும்போது கூடுதல் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து ஒப்பனையை சரிசெய்துகொள்வதுபோல, சிவாஜி எனும் நடிப்பிற்கான கண்ணாடி முன் நிற்கும்போது சக நடிகர்-நடிகைகள் தங்கள் நடிப்பை சரி செய்துகொண்டு அதிக திறமையை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. சிவாஜியின் சாயல் இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு திரையுலகில் அவருடைய நடிப்பாற்றல் ஆதிக்கம் செலுத்தியது.
நாடகமேடையிலிருந்து வந்தவர் என்பதாலும், அன்றைய திரைப்படங்களில் அமைந்த கதையம்சங்களாலும் அவை எடுக்கப்பட்ட விதத்தாலும் சிவாஜியின் நடிப்பில் நாடகத்தன்மை என்பது தவிர்க்க முடியாதது. ஆனாலும், அவருடைய வசனஉச்சரிப்பும், அதற்கேற்ற உடல்மொழியும் வேறு எவராலும் நெருங்க முடியாதது. கண்களால் நடிப்பார். புருவங்களால் நடிப்பார். கன்னங்களை மட்டுமே நடிக்க வைப்பார். அவரது உதடுகள் நடிக்கும். உள்ளத்தின் வார்த்தைகளை மௌனத்தால் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துவார். அவரது உடையும் அதற்கேற்ற நடையும், அசத்தலான பார்வையும், அலட்சியமான பாணியும் திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி பரிமாறப்பட்ட அறுசுவை விருந்தாக அமைந்தன. நடுத்தரக் குடும்பங்களின் ரேஷன் கார்டில் இடம்பெறாத குடும்ப உறுப்பினர் எனச் சொல்லும் அளவிற்கு சிவாஜி, ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்பட்டார்.
காதல், நகைச்சுவை, கோபம், சோகம், விரக்தி, அழுகை உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் அவரது முகபாவத்தை எத்தனை நெருக்கமான குளோசப்பிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அப்படியொரு திறமையும் முகவெட்டும் சிவாஜிக்கே வாய்த்திருந்தது. பின்னணி பாடியவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது சிவாஜியின் வழக்கம்.
படத்தைப் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது போன்ற தோற்றம் கிடைக்கும். இத்தகைய பேராற்றல் வாய்ந்த ஒரு நடிகர் சிவாஜிக்கு முன்பும் கிடையாது. பின்பும் கிடையாது. அவருடைய சமகாலத்தில் இந்தியாவில் வேறெந்த மொழியிலும் சிவாஜியைப்போன்ற அற்புத நடிகரைக் காண முடியவில்லை. தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிவாஜி சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவருடைய திறமையை வெளிநாடுகள் அறிந்துகொண்ட அளவிற்கு இந்தியாவில் உரிய அங்கீகாரம் உடனடியாகக் கிடைத்துவிடவில்லை.
1960ல் நடந்த ஆஃப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்றவர் சிவாஜிகணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்திய நடிகர் ஒருவர், வெளிநாட்டில் நடந்த படவிழாவில் விருது பெற்றது என்பது அதுதான் முதல் முறை. சிவாஜி முதன்முதலில் மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வமகன்’ படம் பல வெளிநாட்டுத் திரைக்கலைஞர்களைக் கவர்ந்தது. அவருடைய கலைச்சேவைக்கு கௌரவம் தரும் வகையில், 1962ல் அமெரிக்க அதிபராக ஜான் கென்னடி இருந்தபோது இந்திய கலாச்சாரத் தூதுவர் என்ற முறையில் சிவாஜி அழைக்கப்பட்டதுடன், நியூயார்க்-நயாகரா ஃபால்ஸின் ஒரு நாள் கௌரவ மேயராக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சாவியும் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
கலிபோர்னியாவின் சிறப்புக் குடிமகன் என்ற பெருமையும் அவருக்கு அளிக்கப்பட்டது. அதைப் போலவே, 1976ல் மொரீஷியஸ் பிரதமரின் அழைப்பின்பேரில் அந்நாட்டு சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு நான்கு நாட்கள் தங்க வைக்கப்பட்டார். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் மார்லன் பிராண்டோ. காட்ஃபாதர் உள்ளிட்ட அவருடைய படங்கள் இன்றளவும் சிறப்பு வாய்ந்தவை. அவரைப்போன்ற புகழுக்குரியவர் சிவாஜி என்பதை வெளிநாட்டுக் கலைஞர்கள் உணர்ந்திருந்தனர். அதனால், சிவாஜியை இந்தியாவின் மார்லன் பிராண்டோ என அழைத்தனர். ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவராத்திரி’ படத்தில் ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடித்து உலகளவில் வேறெந்த நடிகரும் அதுவரை செய்திராத சாதனையை செய்து எல்லோரையும் பிரமிக்க வைத்தார் சிவாஜி.

இத்தனை புகழ் அவருக்கு இருந்தபோதும் இந்திய அரசால் ஒரு முறைகூட அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கடைசிவரை வழங்கப்படவில்லை என்பது தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த சோகமாகும். அதற்கு அரசியல் காரணங்கள் நிறைய உண்டு. தனது திரையுலக அறிமுகத்தின்போது தி.மு.கவில் இருந்த சிவாஜி, பின்னர் காங்கிரஸ், சொந்தக் கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி, ஜனதாதளம் என அரசியல் ஈடுபாட்டைத் பல கட்சிகளில் தொடர்ந்தார். காங்கிரசில் அவர் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியால் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) நியமனம் செய்யப்பட்டார். கலைத்துறைக்கான நியமன உறுப்பினர் பதவி அது. அந்தப் பதவியை வகித்துவந்த இந்தி நடிகை நர்கீஸ் இறந்துபோனதால், மிச்சமிருந்த பதவிக்காலம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது. ஆனால், திரைத்துறை சார்ந்த அங்கீகாரம் அவருக்கு அத்தனை சீக்கிரமாகக் கிடைத்துவிடவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதுபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வந்தார். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபிறகு இயக்குநர்களின் விருப்பத்தை நிறைவு செய்து தரும் திறமைமிக்க நடிகராக அவர் தொடர்ந்தார். குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து, முழு ஒத்துழைப்பு கொடுப்பார். எனினும், வழக்கமான அவருடைய வயது-வளர்ச்சி ஆகியவை பற்றி கவலைப்படாத சில இயக்குநர்கள் தொடர்ந்து அவரைக் காதல் காட்சிகளிலும் குடும்பச் சிக்கல் நிறைந்த கதைகளிலுமே நடிக்கச் செய்தனர். அந்த நேரத்தில்தான், சிவாஜியின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும் படமாக அமைந்தது பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’.
நடுத்தர வயதைக் கடந்த ஒருவரின் மன உணர்வுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய படம் அது. சிவாஜிக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். சவாலான அந்த பாத்திரத்திலும் வழக்கம்போல பின்னி எடுத்தார். அதுபற்றி ஊடகங்கள் அவரிடம் கேட்டபோது, “நான் எங்கே நடிச்சேன்? பாரதிராஜா இப்படியும் அப்படியும் நடக்கச் சொன்னார். நடந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். அவர் படம்பிடித்துக்கொண்டார். அதைத்தான் நீங்கள் பார்த்து ரசிச்சீங்க” என்று தனக்கேயுரிய பாணியில் சிவாஜி சொன்னார். முந்தைய தலைமுறை இயக்குநர்கள் விருப்பப்படி எப்படி நடித்துக்கொடுத்தாரோ அதுபோலவே தன் காலத்திய இளையதலைமுறை இயக்குநர்களுடனும் ஒத்துழைத்து சிறப்பாக நடித்தார் சிவாஜி.
அரசியலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தாலும் பெரிய வெற்றிகளைப் பெறமுடியவில்லை. 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரும் அவரது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை சேர்ந்த 49 பேரும் போட்டியிட்டனர். திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி தோல்வி கண்டார். மற்ற 49 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். எனினும், நடிகர் திலகமாக அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்தது.
1992ல் கமல்ஹாசனுக்கு அப்பாவாக தேவர் மகன் படத்தில் அவரின் நடிப்பு மீண்டும் முத்திரை பதித்தது. இந்தப் படத்திற்காக அவருக்கு சிறப்பு விருது 40வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டது. (சிறப்பு விருதுதானே தவிர, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்ல). 1995ல் பிரான்ஸ் அரசின் உயர்ந்த விருதான ‘செவாலியே’ விருது நடிகர் திலகம் சிவாஜிக்கு சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டது. 1998ல் அவருக்கு இந்தியத் திரையுலக சாதனையாளர்களுக்கான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.
தன்னைவிட பெரிய நடிகர், சின்ன நடிகர், மூத்தவர், இளையவர் என்ற பேதமின்றி திரைப்படங்களில் எல்லோருடனும் நடித்தார் சிவாஜி. தமிழ்த் திரையுலகின் இருதுருவங்களான எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ‘கூண்டுக்கிளி’ என்ற ஒரு படத்தில் மட்டும் சேர்ந்து நடித்தனர். எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்து, அந்த பாத்திரமாகவே வாழ்ந்த சிவாஜி விருப்பப்பட்டு நடிக்க முடியாமல் போன வேடம் ஒன்று உண்டு. அது, கணேசனாக இருந்த அவரை சிவாஜியாக பெயர் சூட்டிய தந்தை பெரியார் வேடம். (சிவாஜியின் காலத்திற்குப்பிறகு ‘பெரியார்’ திரைப்படமானபோது அந்த வேடத்தில் சத்யராஜ் நடித்தார்)

ரஜினி நடித்த மெகாஹிட் படமான ‘படையப்பா’வில் ரஜினியின் அப்பாவாக சிவாஜி நடித்தார். இப்படம் 1999ல் வெளியானது. இதுவே அவர் கடைசியாக நடித்த படம். எனினும், அதற்கு முன்பாக அவர் நடித்த ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்பதுதான் அவர் நடித்து, கடைசியாக வெளிவந்த படம். அதையடுத்து, திரையுலகின் வாடாத பூவைப் பறிக்க வருகிறேன் என காலன் வந்துவிட்டான்.
2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி சிவாஜி காலமானார். திரையுலகமும் ரசிகர்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கலைஞர் உள்பட தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் அவரது உடல் எரியூட்டப்பட்டது. 2006ல் சென்னை கடற்கரை சாலையில் சிவாஜியின் கம்பீரத் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் அவருடைய சிலையைத் திறந்து வைத்தார் முதல்வர் கலைஞர்.
எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிப்பின் இலக்கணமாக ரசிகர்களின் நெஞ்சில் உயர்ந்து நிற்பார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்....
-கோவி.லெனின்.
நன்றி நக்கீரன் சினிமா.