என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 25 பிப்ரவரி, 2010

சினிமாவே வேண்டாம்... அரசியலுக்கு வரட்டா?! தியேட்டருக்கு வெளியே பட்டையைக் கிளப்பி வருகிறது அஜீத் சினிமா


நேரு ஸ்டேடியத்தில் அஜீத் அன்று வைத்த நெருப்பு இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் எல்லாப் பக்கங்களிலும் எரிகிறது. அஜீத் நினைத்தாலும், அவருக்காக எழுந்து நின்று கைதட்டிய ரஜினி நினைத்தாலும், அடக்க முடியாத அளவுக்கு இருக்கிறது விவகாரம்!

முதல்வர் கருணாநிதிக்கு 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா'. அதில் மேடை ஏறி மைக் பிடித்த அஜீத், மறைமுகமாகப் பலரையும் பதம்பார்த்தார். எந்தப் பிரச்னைகள் வந்தாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கைவிடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி, தமிழனே கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும், விட மாட்டேங்குறாங்க... வந்தாலும் மிரட்டுறாங்க! - இப்படி அஜீத் பேசப் பேச, கூட்டத்தில் செம கரகோஷம். முதல் வரிசையில் இருந்த ரஜினி, படக்கென்று எழுந்து நின்று கை தட்டி, தன்னுடைய அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது.

அஜீத் ஒரு மலையாளி. அவருக்கு தமிழ், தமிழ்நாடு குறித்த பாசமே கிடையாது. தமிழ்நாட்டுக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு, தமிழ் ரசிகர்கள் தரும் பணத்தில் உயிர் வாழ்ந்துகொண்டு, தமிழனுக்காகப் போராட, வாதாட அஜீத் வர மாட்டாரா? நடிகர் சங்கத்தில் இருந்தால் சங்கம் சொல்வதைக் கேட்க வேண்டும். மீறி வர மாட்டேன் என்பது ஒழுங்குமீறிய செயல். அதை யார் செய்தாலும் விட மாட்டோம் என்று ஒரு தரப்பினரும்...

திடீர் திடீரென்று தமிழினப் பாசம் பொத்துக்கொண்டு பீறிட்டு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதும், அதற்குப் பின்னால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அநாதையாக விட்டுவிடுவதுமாக திரையுலகம் இதுவரை எத்தனையோ பிரச்னைகளைக் கையில் எடுத்த வேகத்தில் கைவிட்டு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் போராடினால் போதாது என்று ராமேஸ்வரம் போய்ப் போராடியது சினிமா உலகம். ஆனால், அடுத்த சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மொத்தமாகக் கொன்று குவிக்கப்பட்டபோது, சென்னை தெருவுக்குக்கூட வரவில்லை. ஒகேனக்கல் பிரச்னைக்காக, கர்நாடக மாநிலத் தேர்தல் முடியட்டும் என்று முதல்வர் கருணாநிதி சொன்னதுமே சினிமாக்காரர்களது கோபம் வற்றிப்போனது. அதாவது, தமிழ்நாடு அரசாங்கத்துக்குக் கோபம் வராத விஷயங்களாகப் பார்த்துப் போராடுவதையும் பேட்டிகள் கொடுப்பதையும் தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் அஜீத் பேசியதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று மற்றொரு தரப்பினருமாக இந்தப் பிரச்னைக்கு இரண்டு முகங்கள் இருந்தன.

ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், அஜீத்துக்கு எதிராகப் பேட்டியளிக்க... 'தலயைத் திட்டினா தலையே இருக்காது' என்று திட்டியபடி ஒரு குரூப் அவரது வீட்டைத் தாக்கியதாக வழக்கு பதிவானது. முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்குத் திடீரென்று வந்த ரஜினி, 'அஜீத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை' என்றும் சொல்லிப் போனார். அன்றைய தினமே அஜீத்தும், கோபாலபுரம் வந்தார். கருணாநிதியைப் பார்த்தார். 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றார். 'நீங்கள் பேசியதில் உறுதியாக இருக்கிறீர்களா?' என்று கேட்டபோது, கருணாநிதி ஸ்டைலில் 'கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்றார். தான் சொன்னது சரியே என்ற முடிவில் அஜீத் இருப்பதையே இது காட்டியது.

ஸ்டேடியத்தில் எழுந்து நின்று கை தட்டிய கோபம் ரஜினி மீது பாக்கி இருக்க... சொன்னதில் என்ன தவறு என்று கோபாலபுரம் வாசலில் அவர் கொடுத்த பேட்டி சினிமா சங்கத்தினர் சீற்றத்தை அதிகப்படுத்தியது. ரஜினி, அஜீத் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்போம், செயல்படவே விட மாட்டோம் என்று அறிக்கைப் பேட்டிகள் வந்தன. சினிமாவில் அதிகபட்சத் தண்டனையான 'ரெட் கார்டு' போடப் போகிறார்கள் என்றும் வதந்தி கிளம்பியது. எப்படி முடியும்? ரஜினி நடிக்கும் 'எந்திரன்' சன் டி.வி-யின் தயாரிப்பு. அஜீத்தின் 50-வது படத்தை எடுக்கப் போவது தயாநிதி அழகிரி. எனவே, இரண்டு பேரையும் நினைத்த நேரத்தில் கை வைக்க முடியாது என்று சிரிக்கிறார்கள்.

ஆனால், எதுபற்றியும் கவலைப்படுகிற ஆளாக அஜீத் இல்லை என்கிறார்கள் நண்பர்கள். அஜீத் உண்மையைத்தான் பேசினார் என்பதற்கு ஒரே சாட்சி ரஜினி. அஜீத் பேசியதும் எழுந்து நின்று கைதட்டியதன் மூலம் அது தெளிவானது. அவர் பேசியதை முதல்வருக்கு எதிரானதாகச் சிலர் திசை திருப்பினர். ஆனால், தன்னை யார், எதற்காக மிரட்டினார்கள் என்பதை முதல்வரைச் சந்தித்தபோது அஜீத் சொல்லிவிட்டார். அஜீத் சொன்ன விளக்கத்தை முதல்வர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்குச் சாட்சி, கலைஞர் டி.வி-யில் வரும் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' விளம்பரத்தில் இதுவரை வராமல் இருந்த அஜீத் பெயர் இப்போது வர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மேலும் அதைப் பெரிதுபடுத்த அஜீத் விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தும் அவரது நண்பர்கள், மேலும் சில விளக்கங்களைச் சொல்கிறார்கள்.

தமிழ்ப் பிரச்னை, தெலுங்குப் பிரச்னை என்று அஜீத் பார்க்கவில்லை. கருணாநிதியா... ஜெயலலிதாவா என்ற வேறுபாடும் இல்லை. ஒரு நடிகன் எல்லா விஷயத்துக்கும் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் தவறு என அஜீத் நினைக்கிறார். அரசியலைக் கட்சிகள் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கென்ன என்பதுதான் அவரது கொள்கை. ஆளுங்கட்சிக்கு ஆதரவான விழாக்களில் மட்டும் கலந்துகொண்டால் மற்ற கட்சிகளை எதிர்ப்பதாக ஆகாதா என்றும் அவர் கேட்கிறார். மற்ற ஹீரோக்கள் இதைப்பற்றி யோசிப்பது இல்லை. அஜீத் யோசிக்கிறார். அதுதான் அவருக்குள்ள சிக்கல். அவர் அரசியலை முழுமையாகத் தெரிந்துகொள்ள நினைக்கிறார். அதனால்தான் ஒதுங்கி நிற்க விரும்புகிறார்.

படத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சிலர் அறிவுரை சொன்னதும், கோபமானார். இது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது. அதைப்போல அரசியலுக்கு அட்வைஸ் பண்ணினால் யார் ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் அவரது கேள்வி. ஒரு கட்டத்தில், 'கேமராவுக்கு முன்னால நிற்கிறதே எனக்குப் பிடிக்காமப் போயிடும்போல.. இப்படியே கொட்டிக் கொட்டி என்னையும் அரசியலுக்கு வரவெச்சிருவாங்கபோல. மன்னிப்பு கேட்டாத்தான் சினிமாவில் நடிக்க முடியும்னா, சினிமாவே வேண்டாம்னுகூட முடிவெடுத்திருவேன். அப்போ, எனக்கு செக்யூரிட்டி? பேசாம அரசியலுக்கு வரட்டா? என்று மிக நெருங்கிய நண்பர்களிடம் மனதின் பாரத்தை இறக்கி ஆலோசனை கேட்டிருக்கிறார். பலரும் பலவிதமாக ரூட் காட்ட, இறுதி முடிவை இப்போது தள்ளிவைத்திருக்கிறார்! என்கிறார்கள்.

கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் சினிமாக்காரர்கள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும் மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். 1996 மற்றும் 2001 தேர்தலில் ரஜினியும், 2006 தேர்தலில் வாக்குகளைப் பிரித்துக்காட்டி விஜயகாந்த்தும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். 'அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிரான கொந்தளிப்புகள் இருந்தாலும், அதைத் தூண்டிவிட்டு சூட்டை அதிகப்படுத்துபவர்களாக ஹீரோக்கள் இருந்தார்கள். இந்த அடிப்படையில் வரும் தேர்தலில் அஜீத் வருகை அமைந்துவிடக் கூடும். அஜீத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஒட்டப்படும் போஸ்டர்கள் இதற்கான க்ரீன் சிக்னலாகப் பளிச்சிடுகின்றன!