வேளாங்கண்ணியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.தோண்ட தோண்ட சிலைகள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மைக்கேல்சாமி (வயது42). அவர் தனது சொந்த ஊரான வேளாங்கண்ணியில் சொந்த வீடு கட்டுகிறார்.
அங்கு அஸ்திவாரத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை நேற்று ஆழப்படுத்தியபோது சிறிய அளவிலான 3 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குழி பகுதியில் ஆழமாக தோண்டப்பட்டது. அப்போது ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததுபோல், அடுத்தடுத்து ஐம்பொன் சாமி சிலைகள் கிடைத்தன.
10 அங்குலம் முதல் 38 அங்குலம் வரை உயரம் உள்ள மொத்தம் 13 ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்தன. கலெக்டர் முன்னிலையில் பூஜை தகவல் அறிந்ததும் திரளான பொதுமக்கள் அந்த பகுதியில் கூடினார்கள்.
மாவட்ட கலெக்டர் முனிய நாதன், வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த சாமி சிலைகளை பார்வையிட்டார். அவர் முன்னிலையில் அந்த சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட இருக்கும் இந்த சிலைகள் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆய்வுக்குப்பின்னரே அவை எந்த காலத்தை சேர்ந்த சிலைகள் என்பது தெரிய வரும்.
சமீபத்தில் நாகை மாவட்டம், கமுக்கனி முட்டம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டின் மூலம், கீழத் தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் சோழர்கால பொருட்கள் புதைந்து கிடக்கும் தகவல் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.