அரசாங்கத்தினால் நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக கூறி சுமார் 50 அடி உயர கம்பத்தில் ஏறி இருந்து புதுவிதமான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய நபர் 18 மணிநேரத்தின் பின்னர் மிகவும் பாதுகாப்பான முறையில் கீழே இறக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு 18 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரும்
தீயணைப்பு படையினரும் மிகவும் சாதுரியமான முறையில் அவரை நேற்றிரவு இறக்கி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். தனது கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது இரத்த உறவை சேர்ந்த ஒருவர் நேரில் வந்து கேட்டறிய வேண்டும் என அந்நபர் வலியுறுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியின் உறுதிமொழியை அடுத்தே அவர் தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சம்மதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.காலியைச் சேர்ந்த மேற்படி நபர் முதலில் தனது பெயர் ரோஹித்த என்று அறிமுகப்படுத்திக் கொண்ட போதிலும் அசோக்க சமந்த த சொய்சா (வயது 31) என்பதே அவரது உண்மையான பெயர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர் முன்னர் இராணுவ சேவையில் இணைந்திருந்ததாகவும் முதற்கட்ட விசார ணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரரான அசோக்க சமந்த த சொய்சா நேற்று திங்கட்கிழமை சகல ஆயத்தங்களுடன் அதிகாலை 3 மணியளவில் விஹாரமாதேவி பூங்காவுக்கு வந்ததுடன் அதன் இரும்பு வேலிமீது ஏறிப் பாய்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த விளம்பர இரும்புக் கம்பத்தில் பதாகைகளை கட்டியதுடன் அதில் நின்றவாறு உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்தார். இவரது இந்தப் போராட்டம் நேற்று இரவு 9 மணியைத் தாண்டியும் நீடித்தது. இதன்போது அவர் சுமார் 18 மணித்தியாலங்கள் இரும்புக் கம்பத்தில் நின்றவாறே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பிரசாரத்துக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 50 அடி உயரமான இரும்புக் கம்பத்தின் மீதேறியே இவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் தனது போராட்டம் தொடர்பிலும் தான் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் வந்து தன்னை சந்திக்காத பட்சத்தில் கம்பத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
முன்னதாக 50 அடிக்கும் உயரமான பாதுகாப்பற்ற இடத்தில் இருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இவ்விளைஞன் பாதுகாப்புக்கு நேற்றுக் காலை 11 மணிவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னரே பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் அவரது பாதுகாப்புக்கென இரண்டு அடி உயரத்தில் மூன்று மெத்தைகள் வைக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர் தலைக் கவசத்தை அணிந்திருந்ததுடன் முகத்தை துணியால் மூடியிருந்தார்.
முயற்சி தோல்வி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நபர் அதற்காக தேர்ந்தெடுத்துள்ள இடமானது பாதுகாப்புக்கு ஏற்றதானதல்ல என்பதால் அவரை அங்கிருந்து இறக்குவதற்கு தீயணைப்புப் பிரிவின் முதலுதவிப் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன்போது அதிகாலை மூன்று மணி முதல் கம்பிக்கூட்டின் அரைப் பகுதியில் நின்றிருந்த போராட்டக்காரர் தன்னை பலவந்தப்படுத்த வேண்டாம் என்றும் ஜனாதிபதி வந்து தன்னை சந்தித்தால் ஒழிய கீழே இறங்கப் போவதில்லை என்றும் கூறி வேகமாக இரும்புக் கூட்டின் உச்சிக்கு ஏறிச் சென்று விட்டார்.
இதேவேளை தனது கோரிக்கையை வெளிப்படுத்திய குறித்த நபர் பெயரையோ அல்லது ஏனைய விபரங்களையோ வெளிப்படுத்தவில்லை. இதனையடுத்து தீயணைப்புப் பிரிவின் முதலுதவிப் பிரிவினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
கோரிக்கை இரும்புக் கூட்டுக் கம்பத்தில் மூன்று பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ள அவர் அதில் பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நாட்டில் பாரிய அசாதாரணங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஜனாதிபதியின் கவனம் அவசியமானது.
அரசாங்கத்தின் நிர்வாகத்தில் தவறு இருக்கின்றது. ஜனாதிபதியை சுற்றியிருக்கின்ற அதிகாரிகளின் நடவடிக்கைகள் இந்நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைப்பதாகவே உள்ளன.
அதேபோல் நானும் இந்த அநீதிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே என் தரப்பு நிலைப்பாடுகளை அறிந்து நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை வந்து சந்திக்க வேண்டும்.
அதுவரையில் எனது போராட்டம் தொடரும் என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொலைபேசியில் தொடர்பு 50 அடி உயரத்தில் நின்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேற்படி நபடம் தொடர்பு கொள்வதற்கு ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சியையடுத்து அவரது கைத் தொலைபேசி இலக்கம் ஒருவாறு கிடைக்கப் பெற்றது. இதனையடுத்து அவருடன் தொடர்பு கொண்டு போராட்டத்தின் நோக்கம் குறித்து வினவப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் இரு சகோதரிகளைக் கொண்ட நான் தந்தையை இழந்தவர். தாய் இருக்கிறார். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.
இவற்றில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று கோரியே உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். ஜனாதிபதி வந்து என்னை நேரில் சந்திக்கும் வரையில் எனது போராட்டத்தைத் தொடருவேன்.என்னை பலவந்தப்படுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது.
எனது தாயார் மற்றும் தங்கைமாரின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டே எனது முகத்தை துணியால் மறைத்துக் கட்டியுள்ளேன் எனக் கூறினார்.
இதன் பின்னர் அவரது கைத்தொலைபேசியுடன் தொடர்புகொள்ள முடியாது போய் விட்டது. தனது கைத்தொலைபேசியின் பற்றரி செயலிழந்து விட்டதாக செய்கை மூலம் அவர் கூறினார்.
தண்ணீரை மறுத்தார் இதேவேளை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தமையால் நீர் வேண்டுமா என கீழிருந்து செய்கை மூலம் வினவியதற்கு வேண்டாம் நன்றி என செய்கை மூலமே அவர் பதிலளித்தார்.
இதேவேளை நேற்று பிற்பகல் வேளையிலும் இந்நபரை கீழே இறக்குவதற்கு பொலிஸார் தீயணைப்பு பிரிவினரும் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டன. இருந்தும் நேற்று இரவு 9 மணியளவில் மூன்றாவது தடவையாகவும் முயற்சித்த பொலிஸார் சம்பவ இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் தீயணைப்பு பிவினரையும் உதவிக்கு அழைத்து அவர்களது பாரம் தூக்கி இயந்திரம் மூலம் 50 அடி உயரத்திலிருந்த நபரை கீழே இறக்கினர்.
இறக்கப்பட்ட நபர் சோர்வடைந்திருந்தமையால் அவரை சற்று இளைப்பாறுமாறு நிறுத்திவைத்த பொலிஸார் பின்னர் அவரது ஆடைகளை முழுமையாக பரிசோதித்ததன் பின்னர் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த அம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கொ ழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்
ஏறியிருக்கையில்...
இறக்கிய பின்னர்..