ஐஸ்லாந்தின் எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) என்ற எரிமலை ஒரு மாதத்திற்குள் தற்போது இரண்டாவது தடவையாக வெடித்திருப்பது பல வட ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்தை நிறுத்த வைத்துள்ளது. எரிமலை கக்குகின்ற சாம்பல் காற்று மண்டலத்தில் தூசுப் புகையாகப் பரவியுள்ளது. இந்தப் புகை மேகம் பறக்கும் விமானங்களின் இயந்திரத்தைப் பழுதாக்கிவிடும்,
விமானத்தின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்துவிடும் என்று அஞ்சி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக லட்சக்கணக்கான விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரபரப்பாக பயணிகள் வந்து போகின்ற விமான நிலையங்களில் எல்லாம் பயணிகள் மூட்டையும் கையுமாக தரைகளில் படுத்துறங்கும் நிலைமையைக் காண முடிகிறது.
இதனால் விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்கின்றன.
வேறு தேதியில் பயணிக்க விரும்பாத பயணிகளுக்கு இந்த நிறுவனங்கள் டிக்கெட் தொகையை திரும்பத் தர வேண்டும்.
விமானங்கள் பறக்காததால் எரிபொருள் செலவு இருக்காது என்றாலும், ஊழியர்களுக்கான சம்பளம், விமானத்துக்கான வாடகைப் பணம், கடன் வாங்கிய தொகைக்கான வட்டி போன்ற செலவுகளையெல்லாம் விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே இந்த விமான நிறுவனங்கள் பெரும் நிதிச் சிரமங்களை சந்தித்திருந்தன.
பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாது சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற சீக்கிரம் கெட்டுப்போகக்கூடிய பொருட்களுக்கு இந்த விமான நிறுவனங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரலாம்.
சுற்றுச் சூழல் தாக்கம்
இந்த எரிமலை உறைந்த பனி ஏரியொன்றின் அடியில் வெடித்துள்ளதால், நெருப்புப் பிழம்பின் சக்தியும் பனிக்கட்டியும் சேர்ந்து காற்று மண்டலத்தில் வெளியிட்ட தூசுப் புகை, காற்று மண்டலத்தில் பத்து கிலோமீட்டர்கள் உயரம் வரை பரவியுள்ளது.
அது காற்று மண்டலத்தில் பரவி, மெது மெதுவாக மீண்டும் பூமியில் படிந்துவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த தூசின் விளைவாக மனிதர்களுக்கு பெரிய உடல்நலப் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கருதப்படுகிறது.
ஆனால் அந்த எரிமலை அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு முக்கியக் கேள்வியாக இருக்கிறது.
எரிமலை தணிய ஆரம்பித்திருப்பதாகத்தான் தெரிகிறது என்று பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணர் டாக்டர் டேவ் ரோதரி கூறியுள்ளார்.
அருகில் உள்ள வேறொரு எரிமலையும் தற்போது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மேலும் பெரிய அளவில் காற்று மண்டலத்தில் தூசுப் புகைப் பரவலாம். இருந்தாலும்கூட, உலக அளவில் கணிசமாக ஏதும் நடக்கும் என்று யாரும் கருதவில்லை.
அறிவியல் விளக்கம்
அட்லாண்டிக் கடல் பரப்பின் மையத்தில் உள்ள மலைத்தொடரில் அமைந்திருக்கின்ற ஐஸ்லாந்தைப் பொறுத்தவரை அங்கு எரிமலைகள் வெடிப்பதென்பது புதிய விடயமல்ல.
அட்லாண்டிக் கடலடியில் உள்ள இந்த மலைத் தொடர், டெக்டானிக் பிளேட்ஸ் எனப்படும் உலகின் மேற்பரப்புத் தட்டுகள் இரண்டு ஒன்றோடொன்று அகன்று செல்கின்ற ஓர் இடம்.
அப்படி அகலும்போது உருவாகும் இடைவெளியை நிரப்ப பூமிக்கு கீழே இருந்து பாறை பிழம்பு மேலே வரும் என்பதுதான் இதற்கான அறிவியல் விளக்கம்