என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 3 ஏப்ரல், 2010

தீக்குளித்த தொண்டருக்கு நேரில் ஜெயலலிதாவும் வைகோவும் ஆறுதல்

பென்னாகரம் தேர்தலில் அதிமுக தோற்றதால் ஈரோடில் தீக்குளித்த தொண்டரை ஜெயலலிதாவும், வைகோவும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் (வயது 55). டி.வி.யில் தேர்தல் முடிவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

                                    தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீபிடித்து எரிந்தது. அக்கம்-பக்கத்தில் இருந்தவர்கள் எரிந்த தீயை அணைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பிறகு மேல்சிகிச்சைக்காக ஈரோடு கோவை மெடிக்கல் சென்டரில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்த விஷயத்தை ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.வி.ராமலிங்கம், ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு மனவேதனை அடைந்த ஜெயலலிதா அ.தி.மு.க. தொண்டரை பார்க்க ஈரோடு வருவதாக தெரிவித்தார். 

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்று ஹெலிகாப்டரில் ஈரோடு சென்றார். அங்கிருந்து பின்னர் கார் மூலம் கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரிக்கு போனார். 

அங்கு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. தொண்டர் தங்கவேலை பார்த்து ஆறுதல் கூறினார். 

குடும்பத்தினருக்கும் ஜெயலலிதா ஆறுதல் கூறினார். 

முன்னதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஸ்பத்திரிக்கு சென்று தங்கவேலுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஈரோட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த தங்கவேலு பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தாங்க முடியாமல் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததை கேள்விப்பட்டு அவரை காண வந்தேன். இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. 

தங்கவேலுவிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அண்ணா என்னால் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறினார். 

இந்த சம்பவத்தை பார்க்கும்போது உயிரினும் மேலாக அ.தி.மு.க.வை நேசிக்கும் லட்சோப லட்சம் தொண்டர்கள் உள்ளத்தை பார்க்க முடிகிறது. தங்கவேலு மருத்துவ சிகிச்சை பெற்று நலம் அடைந்து அவர் வீடு திரும்ப வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கணேசமூர்த்தி எம்.பி. உடன் இருந்தார்