தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது படங்களை நீக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) முடிவு செய்துள்ளது பெயர்ப்பலகைகளில் பிரதமர், சோனியா படம் இருப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில்
இருந்து ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து படங்கள் நீக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை இடங்களில் பெயர்ப்பலகைகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.சி. அகர்வால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டிருந்தார்.
அதற்கு என்எச்ஏஐ அளித்த பதில்:
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் ஒரு மன்மோகன் சிங், சோனியா படம் பொறித்த பெயர்ப் பலகை என மொத்தம் 1,500 இடங்களில் வைக்கத் திட்டமிட்டிருந்தோம். இதுதொடர்பாக திட்ட இயக்குநர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெயர்ப்பலகைகள் ஆங்கிலம், இந்தி, உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவையடுத்து அந்தப் பெயர்ப் பலகைகள் பொருத்துவது நிறுத்தப்பட்டது. மேலும் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளிலிருந்து சோனியா, மன்மோகன் படங்கள் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நெடுஞ்சாலைத் திட்டங்கள், சாலை வசதிகள் குறித்த படங்கள் இடம்பெறும்.
இதுதொடர்பாக மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் படங்களை அந்த பலகைகளில் பயன்படுத்த வேண்டும் என்றால் முன்அனுமதியைப் பெறவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது