என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 11 மார்ச், 2010

நளினி-அறிக்கையை சமர்ப்பித்தது சிறை ஆலோசனைக் குழு: விரைவில் விடுதலை?

சென்னை: ராஜீவ் காந்தி வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே  செய்வது தொடர்பாக ஆய்வு நடத்திய சிறை ஆலோசனைக் குழு தனது அறிக்கையை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்குப் பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. கடந்த 19 வருடங்களாக அவர் சிறையில் கழித்து வருகிறார்.



இந்த நிலையில் தான் இத்தனை காலம் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் நளினி.

அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன் படி புதிய ஆலோசனைக் குழு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு சிறைக்குச் சென்று நளினியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் இக்குழு தனது பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு, இந்த வழக்கில் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்துள்ள மனு உள்ளிட்டவை நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசீதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அரசு சிறப்பு பிளீடர் தேசிங்கு ஆஜரானார். அவர் தனது வாதத்தில், ஆலோசனை குழுவின் அறிக்கை இன்று அரசுக்கு வரப்பட்டது. நளினியின் விடுதலை தொடர்பாக அந்த அறிக்கை அடிப்படையில் அரசு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. எனவே, அரசுக்கு 2 வாரகால அவகாசம் தரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆலோசனைக்குழு அறிக்கையை கோர்ட்டில் நாளை (இன்று) தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்றனர்.

பின்னர் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆலோசனை குழு அறிக்கை மீது அரசு பரிசீலனை செய்ய வேண்டியதுள்ளது. எனவே, நீதிபதிகள் பார்வைக்காக சீல் வைத்த கவரோடு அந்த அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

அந்த அறிக்கையில், சிறையில் இருந்த காலத்தில் நளினியின் நன்னடத்தை பாராட்டத்தக்க வகையில் உள்ளது. இதன் அடிப்படையில் அவரை விடுவிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று சிறை ஆலோசனைக் குழுவின் பரி்ந்துரை அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

மேலும் இதன் மீதான முடிவை வருகிற 29ம் தேதி அறிவிப்பதாகவும் அது தெரிவித்தது. இதையேற்ற பெஞ்ச், விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

முன்னதாக இந்த அறிக்கை தாக்கல் குறித்து நளினியின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், நளினி குறித்து முடிவு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடலாம். அல்லது மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்று முடிவெடுக்குமாறு மாநில அரசை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொள்ளலாம் என்றார்.

ஏற்கனவே நளினி தொடர்பான எந்த முடிவையும் மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே எடுப்போம் என்று முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நளினி கைது செய்யப்பட்டார். 1999ம் ஆண்டு அவருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதையடுத்து சோனியா காந்தியிடம் கோரிக்கை விடப்பட்டது. அதைப் பரிசீலித்த அவர் 2000மாவது ஆண்டு ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்று கூறியதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனையாக அது மாற்றப்பட்டது.

இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு தன்னை விடுதலை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்தார் நளினி. ஆனால் அப்போது இருந்த சிறை ஆலோசனைக் குழு நளினியின் கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் நளினி.

2 ஆண்டுகளுக்கு முன்பு நளினியை சிறைக்குத் தேடி வந்து சந்தித்தார் பிரியங்கா காந்தி. இதன் மூலம் அவருடைய விடுதலை குறித்த வாய்ப்புகள் பிரகாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.