நாசிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மலேகான் குண்டுவெடிப்பில் கைதான பெண் துறவி பிரக்யா சிங் மறுத்து வருகிறார். இதனால் அவருடைய உடல்நிலை மோசமாகி வருகிறது.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துறவி
பிரக்யா சிங்கின் உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதுகு வலி மற்றும் தண்டுவடம் வலியால் அவதிப்பட்டு வரும் பிரக்யா சிங், சிகிச்சை எடுத்து கொள்ள மறுத்து வருவதால் அவரது உடல் நிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி மருத்துவமனை அதிகாரி ஆர்.எச்.சிங்கே நேற்று கூறுகையில், “மருந்துகளை எடுத்து கொள்ளவோ அல்லது உணவு சாப்பிடவோ பிரக்யா மறுத்து வருவதால் அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது” என்றார்.
பிரக்யா சிங் நேற்று கூறுகையில், “சிறை கண்காணிப்பாளர் ஸ்வாதி ஸ்வாதே என்னை துன்புறுத்தி வருகிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் திட உணவுகளை தவிர்த்து திரவ உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். நாசிக் சிறைத்துறை ஐ.ஜி. மற்றும் உள்ளூர் நீதிமன்ற நீதிபதி என்னை நேரில் சந்தித்து எனது குறைகளை கேட்கும் வரை சிகிச்சை எடுக்கவோ அல்லது உணவு சாப்பிடவோ மாட்டேன்” என்றார்.
இதனிடையே, உணவு சாப்பிட பிரக்யா மறுப்பதால் சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பிரக்யா சிங்குக்கு எதிராக சர்க்கார்வாடா போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்