சென்னையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று திறந்து வைக்கிறார்.சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 12.11.2008 முதல் கட்டப்பட்டு வந்தது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன.
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட், புதிய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி விரும்பினார்.அதற்கேற்ப, சட்டப்பேரவை கட்டிடம் சென்னையில் வைரக்கல்லாக ஜொலிக்கும் வகையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இதில், எதிர்வரும் 19ஆம் திகதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படஉள்ளது. இந்த சட்டப்பேரவை, தலைமைச் செயலகவளாக கட்டிடத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலை திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இந்த விழா கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவுக்கு சோனியா காந்தி, ஆளுநர் பர்னாலா ஆகியோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, ஆந்திர முதலமைச்சர் ரோசய்யா, புதுச்சேரி முதலமைச்சர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விழாவில் கலந்துகொள்கின்றனர்.