என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 25 மார்ச், 2010

பர்மாவின் புதிய தேர்தல் சட்டவிதிக்கு ஆங் சாங் சூசி எதிர்ப்பு

பர்மாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புதிய சட்டத்தைத் தாம் எதிர்ப்பதாக ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சித் தலைவி ஆங் சாங் சூசி தெரிவித்துள்ளார்.பர்மாவின் புதிய சட்டத்தின் படி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடவேண்டுமானால் கட்சிகள் மீண்டும் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்தச் சட்டவிதியின் கீழ் தமது கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி பதிவுசெய்வதை தாம் விரும்பவில்லை என்று தற்போது தடுப்புக்காவலில் உள்ள அக்கட்சியின் தலைவியான ஆங் சாங் சூசி தெரிவித்துள்ளார்.பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களால் அண்மையில் அறிவிக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் நியாயமற்றவை என்று, சூசி தம்மிடம் தெரிவித்தார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி எதிர்வரும் திங்கட்கிழமை கூடும்போது இந்த விடயம் தொடர்பாக கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆங் சாங் சூசி தெரிவித்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.பர்மாவில் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று இராணுவ அரசு அறிவித்திருந்த போதிலும் அதற்கான திகதி இன்னமும் குறிப்பிடப்படவில்லை.
அதேவேளை, பர்மாவின் புதிய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள மியன்மார் தூதரகத்தின் முன்னால் கடந்த வாரம் சூசியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.