என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 11 மார்ச், 2010

சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தில் இந்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி!


மகா சிவராத்திரி தினமான நாளை சனிக்கிழமை பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.காலை 5மணிக்கு ஆரம்பமாகும் சிவராத்திரி சிறப்புப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அபிஷேக,கும்ப பூஜைகள் நடைபெறும். மறுநாள் காலை 5.30மணிக்கு வசந்தமண்டப அலங்காரப் பூஜை நடைபெற்று கேதீஸ்வரநாதர் கௌரி அம்பாள் சமேதராக பாலாவி தீர்த்தக்கரைக்கு உலா வருவார். 

சிவராத்தி வழிபாடுகளில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, திருக்கேதீஸ்வரம் கௌரி அம்பாள் வித்தியாசாலை, மன்னார் சித்திரிவிநாயகர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் வழங்கும் திரு முறைப்பாடல்களும், செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், சிவஸ்ரீ ம.பால கைலாசநாதசர்மா, சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம், ஏ.அனுசாந்தன் ஆகியோரின் சமயச் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.
இவர்களுடன் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்தியாவிலிருந்து வருகைதரும் தேவார இசை மணி திருமதி விஜய லஷ்மிராஜராம், தமிழ் இசைத் தென்றல் திருமதி மீனாட்சி ஸ்ரீநிவாசன் ஆகியோரின் திருமுறைப் பக்திப் பாடல்களும் நடைபெறவுள்ளன என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.