பொதுத்தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைவர்களுடனேயே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அந்த தலைவரை தெரிவுசெய்யவேண்டிய வரலாற்றுக்கடமை வடகிழக்கு மக்களின் கைகளில் உள்ளது.இலட்சியத்தின் உறுதியும் தமிழர் போராட்டத்தில் அனுபவ முதிர்ச்சியும் கொண்ட விலைபோகாத தலைவர்களையே தமிழர்கள் தெரிவுசெய்வர் என்பது திண்ணம் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை தமிழரசுக்கட்சி பாரம்பரிய வரலாற்று பெருமை கொண்ட கட்சி.இலட்சியத்தில் உறுதிகொண்ட,விலைபோகாத கட்சி.பணத்திற்கு மண்டியிடாமல் தமிழர் உரிமை போராட்டத்தை ஆரம்பித்து நடத்திய கட்சியாகும்.தமிழர்களின் சாத்வீகப்போராட்டம் மீது சிங்கள அரசினால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது அது ஆயுதப்போராட்டமாக மாறியது.
30வருட கால ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னர் புதிய சூழலில் ஜனாதிபதித்தேர்தலை எதிர்கொண்டோம்.இப்போது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த சூழலில் இலங்கை இனப்பிரச்சினைக்கு மாகாண ரீதியாக அரசியல் தீர்வைக்காணவேண்டும் என சர்வதேச சமூகமும் இந்தியாவும் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது.
இந்த வாய்பை தமிழ் மக்கள் இழந்துவிடக்கூடாது.தமிழ் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, தமிழ் தேசிய மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் வடகிழக்கு தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அரசியலமைப்பின் அடிப்படையிலானதாக அமையவேண்டும் என்பதையே இலங்கை தமிழரசுக்கு கட்சி வலியுறுத்திவந்துள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் இதற்கான தீவிர பங்களிப்பை வழங்க எமது அண்டைய வல்லரச நாடான இந்தியாவும் சர்வதேச சமூகமும் எமக்கு உறுதியளித்துள்ளன.
இந்த அரியவாய்ப்பை முழுமையாக பயன்படுத்துவதற்கான உறுதியான ஆணையை வடகிழக்கு தமிழர்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வழங்கவேண்டும்.சர்வதேச சமூகம் வடகிழக்கு மக்களின் உறுதியான நிலைப்பாட்டை எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு சில சக்திகள் தீவிரமாகசெயற்படுகின்றன. தமிழ் மக்கள் தங்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து தளரவில்லையென அச்சக்திகளுக்கு இந்த தேர்தலில் உணரவேண்டும்.”என்றார்.