என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வெள்ளி, 26 மார்ச், 2010

சிரச அலுவலக தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

கொழும்பு, ப்ரேபு×க் பிளேஸிலுள்ள எம்.ரி.வி./ எம்.பி.சி.நிறுவன தலைமை அலுவலகம் மீது கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றும் அவ்வாறான எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் காலத்தில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான எந்த அவசியமும் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே லக்ஷ்மன் ஹுலுகல்ல இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"சிரச (எம்.ரி.வி./ எம்.பி.சி.) தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிரச தொலைக்காட்சியின் அனுசரணையுடன் நடைபெறவிருந்த சர்வதேச இசைக் கலைஞர் ஏகோனின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினராலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. "ஜாதிக சங்க சம்மேளனய%27 என்ற அமைப்பினரே அங்கு போயிருந்ததாகக் கூறியுள்ளனர்.

இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சம்பவத்துடன் அரசுக்கு தொடர்பு இருப்பதாக பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. உண்மையில் இந்த சம்பவத்துடன் அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவ்வாறான எதுவும் நிரூபிக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது.
அது மட்டுமல்லாது இது ஒரு தரப்பு மட்டுமன்றி இரு தரப்புகள் சம்பந்தப்பட்ட விடயம். இரு தரப்புகளினாலும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்தும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே இது எப்படி வந்தது, எப்படி ஆரம்பித்தது என யாரும் முடிவுக்கு வந்துவிட முடியாது.

அத்துடன், வந்தவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் விசாரணை நடக்கிறது. 24 மணிநேரத்துக்குள் விசாரணைகளை முடித்துவிட முடியாது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனெனில் தடுத்து வைத்திருக்க போதிய காரணங்கள் இல்லாவிட்டால் பிணையில் விடுதலை செய்ய வேண்டும்%27 என்றார்.

இதேநேரம், மேற்குறித்த சர்வதேச பாடகர் சுற்றுலாத்துறை அமைச்சினாலேயே அழைத்து வரப்படும் நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஏன் அந்த அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையென எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல;
"அது எமக்கு தொடர்பில்லாத விடயம். அது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தான் போய்க் கேட்க வேண்டும். பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான் இந்த தாக்குதல் சம்பவத்தை நியாயப்படுத்தவில்லை. அப்படி நியாயப்படுத்துவது என்றால் இங்கு பொலிஸ் விசாரணைகள் தேவைப்பட்டிருக்காது. இச்சம்பவத்தை அரசாங்கம் கண்டித்திருக்கிறது%27 என்று கூறினார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பி.ஜயகொடி இச்சம்பவம் பற்றி தெரிவிக்கையில்;
"இச்சம்பவத்தில் இரு தரப்புகளில் இருந்தும் பரஸ்பரம் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடகர் ஒருவர் இலங்கையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
சம்பவம் இடம்பெற்றிருந்த போது யாரும் காயமடைந்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது மூவர் சிறு காயங்களுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது எம்.ரி.வி./ எம்.பி.சி. தலைமை அலுவலக கட்டிட கண்ணாடிகளுக்கும் வாளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் இச்சம்பவத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததா என்று ஆராய்ந்து பார்த்தே கூற வேண்டும். எனினும் பொலிஸாருக்கு அறிவிக்காமலேயே பல ஆர்ப்பாட்டங்கள் இங்கு நடத்தப்பட்டிருக்கின்றன%27 என்றார்.
இதேநேரம், எம்.ரி.வி./ எம்.பி.சி. தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.