என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

செவ்வாய், 16 மார்ச், 2010

மாத்தியோசி (விமர்சனம்)

இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பாராட்டி புகழ்ந்த படம் என்று வித்தியாசமாக தினமும் விளம்பரம் செய்து வெளியான படம் மாத்தியோசி.இந்த விளம்பர யுக்தி மாற்றி யோசித்ததன் விளைவுதான். ஆனால் படம்... மாற்றி என்ன... சாதாரணமாக கூட யோசிக்கமால் உருவாக்கியிருக்கிறார்கள்.பாண்டிஓணான்மாக்காமாரி என்னும் நான்கு நண்பர்கள். வாலிப வயதிலும் சட்டை போடாமல் ஊரைச் சுற்றும் இவர்கள்,
   அந்த ஊரையே உண்டு இல்லை என்று பண்ணுகிறார்கள். ஊரில் பிரச்சனை தலைக்கு மேல் போக கிராமத்தில் இருந்து சென்னைக்கு எஸ்கேப் ஆகிவருகிறார்கள். சென்னை இவர்களை போடா வெண்ணைஎன்று சொல்ல, வழிப்பறி, திருட்டு, கொலை என்று இறங்குகிறார்கள். இதற்கிடையில் ஷம்முவை சந்திக்கிறார்கள். ஷம்மு வெளிநாடு போவதற்கு பணத்தை சம்பாதிக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் காவல்துறை அதிகாரி பொன்வண்ணனிடம் லிப்ட் அவர் வீட்டுக்கே வருகிறார்கள். அவரும் தனது பங்குக்கு ஒரு ரவுடியைக் கொலை செய்யச் சொல்ல அதையும் கச்சிதமாக அந்த ரவுடியை தீர்த்துக் கட்டுகிறார்கள். பின்பு அவரிடம் இருந்து அவர்கள் விடைபெற்று சொந்த ஊருக்கே கிளம்புகிறார்கள். விடுவார்களா வில்லன் கோஷ்டியினர்... அவர்களைத் துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா? நால்வரும் என்ன ஆனார்கள் என்பதை மாத்தியோசி முடிவு சொல்கிறது.

பின்னணியில் இயக்குநர் சசிகுமாரின் குரலோடு படம் துவங்குகிறது. வித்தியாசமாக விளம்பரம் பண்ணினார்களே என்ற எதிர்பார்ப்பு மேலிட நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அந்த நான்கு பையன்களின் சேட்டை ஆரம்பிக்கிறது. அவர்கள் சேட்டைக்காரர்கள் என்பதை நிரூபிக்க இவ்வளவு காட்சிகள் தேவையா என்ன? அதுபோன்ற காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. போகிற போக்கில், பிரச்சனைகளை சம்பாதிப்பதுடன் கொலையும் செய்கின்றனர்.

சேரிப்பொண்ணு நமக்கெல்லாம் சாமி இல்லையாடா... நம்ம சாமி எங்கேடா... என்று கேட்கும் இடத்தில் இயக்குநர் பளிச்சிடுகிறார். ஆனால் அதை அவர் தக்கவைத்துக் கொள்ளவில்லை. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே நமது எதிர்பார்ப்பெல்லாம் தகர்ந்து போகிறது. மற்ற படங்களைப் போன்று யூகிக்கும் கதையாக பயணப்படுகிறது படம். மோசமான திரைக்கதையால் தள்ளாடுகிறது படம். நிறைய இடங்களில் தொய்வுநிலை.


நான்கு பேரும் சேர்ந்து அவ்வளவு பெரிய தேரை இழுத்து வருவது, பல கொலைகள் என லாஜிக் மீறிய காட்சிகள் நிறைய. தன் கை பையில் இருந்து திருட முயற்சிப்பவனிடம் ஒரு பெண் தனது விசிட்டிங் கார்டைத் தந்து தன்னை வந்து பார்க்குமாறு சொல்வது, ஷம்மு அவர்கள் நான்கு பேருடனும் தங்குவது, இரவில் பாண்டியுடன் ஊர் சுற்றப்போவது இது போன்ற நம்பமுடியாத காட்சிகள் எக்கச்சக்கம். இவை ஒரு கட்டத்தில் நம் பொறுமையை நிறையவே சோதிக்கின்றன. இதிலெல்லாம் கொடுமையான காட்சி என்னவென்றால், இவர்கள் பணத்திற்காக ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டு வந்த போது அவள் அந்த நேரத்தில் வயதுக்கு வந்துவிட மாமன் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் அவர்கள் செய்து, தலைக்கு தண்ணீரும் ஊற்றுகிறார்கள். (அய்யோ தாங்கலைடா சாமீய்....!)


மகாகவி பாரதியின் அச்சம்தவிர் பாடலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பாடல் பாடியவரின் ஒலியில் எந்த கம்பீரமும் இல்லை. அஞ்சாதேபடத்தில் அச்சம் தவிர்பாடலை எஸ்.பி.பி.யின் கம்பீரக் குரலில் கேட்ட காதுகள் இதைக் கேட்டு ரசித்துவிடுமா என்ன...?

பிச்சைக்காரன் ஷம்முவைப் பார்த்து சைட் அடித்துக் கொண்டே பாடல் பாடும் காட்சி மட்டும் சிரிப்பை வரவழைக்கிறது. மற்றபடி திரையில் யாராவது சிரித்தால் நமக்குள் பெரிய எரிச்சல்தான் எட்டிப்பார்க்கிறது.
 போலீஸ் ஆபிசராக பொன்வண்ணன் வந்ததும் படத்தில் கொஞ்சம் திருப்பம்... அட இனியாவது படம் சூடுபிடிக்கும் போலும் என்று எதிர்பார்த்தால் பழையபடி தடுமாறுகிறது.

பல காட்சிகளில் அநியாயத்துக்கு நீளம். இயக்குநர் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும் என்று நினைத்துவிட்டார் போலும்.
 ஒளிப்பதிவு ஓ.கே. சொல்லலாம். நான்கு பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சில சமயங்களில் ஓவர் ஆக்டிங். ஷம்முவைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பேசாம ஒரு புதுமுகத்தையாவது போட்டிருக்கலாம்.


மாத்தியோசி - பொறுமையை சோதிக்கிறது!