தொலைத்த இடத்தில் தேடுவதும், புதைத்த இடத்தில் தோண்டுவதும் சினிமாவில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். இதோ, தொலைத்த இடத்திலேயே தேட முடிவு செய்திருக்கிறார் பிரபு. அசல் படம் வெளிவந்த சில நாட்களிலேயே கையோடு ஒரு பிரச்சனையும் நடந்தேறியது கோடம்பாக்கத்தில். தெரிந்தோ தெரியாமலோ அஜீத் பேசிய பேச்சு, அசல் படத்திற்கு நல்லதாக அமையவில்லை. படமும் பரவாயில்லை ரகம்தான் என்பதால் கலெக்ஷனில் கல்லெறிந்தது விதி.
திரையிட்ட பல்வேறு இடங்களில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. ஆனால் நகர் புறங்களில் வசூல் நிம்மதியை கொடுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி அங்கும் இங்கும் தேறிய கலெக்ஷன், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்த, அதை சரிகட்ட வேண்டும் என்றார்களாம் பிரபுவிடம்.
இதே காரணத்தை அஜீத்திடமும் பேசியிருக்கிறார் பிரபு. இதையடுத்து விரைவில் ஒரு படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியிருக்கிறாராம் தல. கதை விஷயத்தில் முன்பை விட கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் பிரபு. இதற்கு அஜீத்தும் மனசு வைக்க வேண்டுமே?