ஒரே நாள்! ஒரே ஒரு வீடியோ காட்சி... சுவாமி நித்யானந்தாவின் ஒட்டுமொத்த மரியாதையையும் தூக்கி உப்பரிகையில் ஏற்றிவிட்டது. நித்யானந்தாவையும் நடிகை ரஞ்சிதாவையும் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்க்க நேரிட்ட மக்கள் பதறிப்போனார்கள்.தமிழகத்தில் இதைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை என்ற நிலை.
அந்த வீடியோவை எடுத்தவர்கள் யாரோ எவரோ? அதில் வீழ்த்தப்பட்ட இலக்கு, நித்யானந்தாவாக இருக்கலாம். ஆனால்... நடிகை ரஞ்சிதா?
தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டும்கூட ஓரளவுக்கு மேல் உயரத்தைத் தொட முடியாமல் போனவர் ரஞ்சிதா. இளம்வயதில் கூட ஹீரோக்களின் அம்மா வேடங்களில் நடித்தவர் அவர். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகளே அற்றுப்போய், குறிப்பிடும்படியான எந்த வருமானமுமின்றி அவர் சிரமப்பட்டிருக்கிறார். கணவரையும் பிரிந்துவிட்ட நிலையில், கோடம்பாக்கம் பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் இரு வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய்க்கு வழி செய்து கொண்டு,தியாகராய நகரிலுள்ள அபார்ட்மெண்டில் குடியிருந்திருக்கிறார் ரஞ்சிதா.
பிறகு சின்னத்திரை பக்கம் போனார்.அங்கும் ரஞ்சிதாவின் வருமானத்துக்கு வழிபிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில் மன உளைச்சல் மட்டுமின்றி ‘வீஸிங்’ பிரச்னையாலும் அவர் அவதிப்பட்ட நேரத்தில்தான், நண்பர்கள் மூலம் நித்யானந்தாவைப் பற்றி கேள்விப்பட்டு அவரது ஆசிரமத்துக்குச் சென்றிருக்கிறார்.
அங்கே குழலூதும் கண்ணனாக நித்யானந்தாவும், கோபிகையராக ஆசிரம பக்தைகளும் இருந்தநிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே நித்யானந்தாவின் நெருக்கமான வளையத்துக்குள் ரஞ்சிதா சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள், ஆசிரம வட்டாரத்தினர்.
ரஞ்சிதா உண்மையில் யார்? அவர் நித்யானந்தாவை இலக்காக்கி எய்யப்பட்ட அம்புகளில் ஒருவரா? சாதாரண ஒரு சிஷ்யை என்பதைவிட ஒரு நடிகை என்றால் பயங்கர பரபரப்பு ஏற்படும் என்பதற்காக யாரோ ஆடும் சதுரங்கத்தில் பகடைக்காயாக நகர்த்தப்பட்டவரா ரஞ்சிதா?
அறைக்குள் நடந்த அந்தரங்கம் எல்லாம் அப்பட்டமாக ஊடகங்களில் வந்துவிட்ட நிலையில்,நடிகை ரஞ்சிதாவுக்கு என்றும் ஒரு மனம் இருக்கிறதே? அவர் என்ன நினைக்கிறார்? அதை நாம் தெரிந்துகொள்ள முயன்றோம்.
ரஞ்சிதாவின் செல்போன் முற்றிலுமாக முடங்கி விட்ட நிலையில், அவரது நலம்விரும்பிகள் சிலரது உதவியுடன் மீண்டும் மீண்டும் அவரைத் தொடர்புகொள்ள முயன்றோம். ம்ஹும்.... அவ்வளவு லேசில் நடக்கிற விஷயமாக அது தெரியவில்லை.இருந்தும் முயற்சியை விட்டுவிட முடியுமா? தொடர்ந்து முயன்றோம்.
முடிவில், கேரளாவில் ‘திரு’ என்று ஆரம்பிக்கும் ஊரில், நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் நடிகை ரஞ்சிதாவுடன் நம்மால் பேச முடிந்தது.அவர் மிகவும் கலங்கிப் போயிருப்பது அவர் குரலிலிருந்தே தெரிந்தது.
”என்னைப் பற்றி, என்னை வளர்த்துவிட்ட தமிழ் மீடியாவே ரொம்ப கேவலப்படுத்திக் கொண்டிருப்பது நியாயம்தானா?’’ என்று ஆரம்பித்தவர், திடீரென விம்ம ஆரம்பித்தார்.
”நான் நல்ல குடும்பத்துப் பெண். தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவள்.ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நான்தான் எடுத்தது போல மீடியாக்கள் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை’’ என்று விசும்ப ஆரம்பித்தார் அவர்.
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே? என்றபோது, மறுமுனையில் ஒரு நிமிடம் மௌனம். ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்பதுபோல் இருந்தது.
”ஆமாம்! ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்திருக்கிறார்கள். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஊருக்கே தெரியும். அவரது சொற்பொழிவுகளாலும்,கருத்துக்களாலும் கவரப்பட்டவள் நான். அது மட்டுமல்ல, சிறு வயது முதல் என்னைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த வீஸிங் பிரச்னையை ஒரே நாளில் அவர் சரிசெய்துவிட்டார். அன்று முதல் நான் அவரது பக்தை ஆகிவிட்டேன்.’’
அந்த வீடியோ?
‘‘காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான். அதில் ஏதேதோ சேர்த்து, ஒரு நீலப்படம் அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.’’
சாமியாரை மிரட்டிப் பணம் சம்பாதிக்கத்தான் நீங்கள் இப்படிச் செய்தீர்கள் என்கிறார்களே?
”இப்படிச் சொல்ல சிலருக்கு எப்படி மனம் வந்தது? பணம்தான் முக்கியம் என்றால் அதைச் சம்பாதிக்கப் பல வழிகள் இருக்கின்றன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி ஒரு வீடியோ எடுத்துக்கொள்ளச் சம்மதிப்பாளா?’’
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
( எதிர்முனையில் விம்மல் சப்தம்) “விவாகரத்து செய்துவிட்டதாக பத்திரிகை, டி.வி.க்களில்தான் சொல்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.’’
நடந்த உண்மையை,வெளிச்சத்துக்கு வந்து நீங்களே முழுமையாகச் சொல்லக்கூடாதா?
”அதுதான் சொல்லிவிட்டேனே? நித்யானந்தா மகாஞானி. அவரே இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்வார். தயவுசெய்து மீடியாக்கள் என்னை மேலும் மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ப்ளீஸ்’’ பொங்கி வரும் அழுகையை நிறுத்தமுடியாமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ரஞ்சிதா.
வீடியோவால் அம்பலமாகியுள்ள நித்யானந்தா,இப்போது ஒரு வீடியோ மூலமே விளக்கம் ஒன்றையும் தந்திருக்கிறார்.இன்னமும்கூட அவர் விரிவான பலப்பல விளக்கங்களை வெளியிடலாம்.ஆனால், வாழ்க்கையில் நிம்மதியைத் தேடிச் சென்ற இடத்திலும் அதைத் தொலைத்துவிட்ட ரஞ்சிதாவின் நிலை என்ன?
இந்த நிமிடத்தில் நம் இதயத்தைக் கனக்க வைக்கும் கேள்வி இதுதான்!
நன்றி குமுதம்