சென்ற வாரம் மதுரையில் வழக்குரைஞர்கள் தமிழில் வாதாடினார்கள். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக தமிழில் வழக்காடல் நேற்று நடந்துள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த வாரம் வக்கீல்கள் தமிழில் வாதாடினார்கள். இதற்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்தத£ல் வக்கீல்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு வக்கீல் முழுக்க, முழுக்க தமிழில் வாதாடினார். நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு ஆஜரான வக்கீல் எம்.பாரி, “இந்த வழக்கில் நான் தமிழில் வாதாட விரும்புகிறேன்” என்றார். அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவிக்கவில்லை. வக்கீல் பாரி தமிழில் வாதாடியதாவது:
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த எனது கட்சிக்காரர் ஸ்ரீரங்கா, கடை நடத்துவதற்காக அம்மாப்பேட்டையில் ஒரு இடம் வாங்கி, கட்டிடம் கட்டு கிறார். சிலர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது, அங்கு கட்டிடம் கட்டக் கூடாது என தகராறு செய்கின்றனர்.
இதுபற்றி போலீசில் புகார் செய்த ஸ்ரீரங்காவை, 6 பேர் தொடர்ந்து மிரட்டுகின்றனர். அவரதுஉயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் சேலம் போலீஸ் கமிஷனரிடமும், அம்மாப்பேட்டை போலீசிலும் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
மிரட்டல் விடுத்த 6 பேரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். போலீசாருக்கும், தகராறு செய்த 6 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
விசாரித்த நீதிபதி, அம்மாப்பேட்டை போலீசாருக்கும், எதிர்மனுதாரர்கள் 6 பேரும் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை ஒருவாரம் தள்ளி வைத்தார்.
முதல் முறையாக உயர் நீதிமன்றத்தில் ஒரு வக்கீல் தமிழில் வாதாடியிருப்பது வக்கீல்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது