புலிகளின் கவிஞர் என கூறப்படும் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரின் சகோதரி ராசலட்சுமி தனது கணவன் பத்மநாதனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து உரையாடினார். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார்.
இதன் போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் தெரிவித்ததோடு, தனது சகோதரனை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும், தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும், அந்த நிலையில் தயா மாஸ்டர் இன்று வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார்.
புதுவை இரத்தினதுரை குறித்த விபரங்களை கண்டறிந்து அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதபிமான அடிப்படையில் உதவ முடியும் எனவும் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.