பெரிய மீசை, திண்ணை வச்ச வீடு, பட்டை கரை வேட்டியுடன் பண்ணையார் ஸ்டைலில் தோன்றுகிறார் அழகம்பெருமாள். ஆஹா, பஞ்சாயத்துல நிக்க வச்சு பஞ்சராக்க போறாங்கப்பு என்று ரணத்திற்கு ஆயின்ட்மென்ட் தேட ஆரம்பித்தால்... 'அட போங்கய்யா, நாங்க வேற ரூட்டு' என்று கச்சேரியை களை கட்ட விடுகிறார் திரைவண்ணன். புது இயக்குனராம். பொழச்சிப்பீங்க சாரே! ஆனாலும் இவர் கதையை தேர்வு
செய்ததெல்லாம் ஆக்ஷன் படங்கள் அடுக்கி கிடக்கும் அரத பழசான கோடவுனில்தான் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.அப்பாவிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு ரயிலேறும் ஜீவாவுக்கு முதல் அட்ராக்ஷனே பூனம் பாஜ்வாவின் தரிசனம்தான். அதிலும் லாரி மோதி விபத்துக்குள்ளாகவிருந்த ஜீவாவை காப்பாற்றுகிறார். அவ்வளவுதான், மனுஷன் கரைந்து உருக ஆரம்பித்துவிடுகிறார் பூனத்திடம். கையை கோர்த்தோமா, காதலித்து தீர்த்தோமா என்றில்லாமல் அவர் ஒரு கதையை அவிழ்த்துவிடுகிறார். அது?
ராயபுரம் சிவமணி (ஜே.டி.சக்கரவர்த்தி) என்ற ரவுடி, பூனத்தை காதலிக்கிறாராம். யாராவது இவரிடம் பேசினால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத ரவுடி, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு தருகிற தண்டனை சுரீர் ரகம். ஒருவனுக்கு உட்காருகிற இடத்திலேயே இஸ்திரி பெட்டியை சுட சுட வைக்கிறார்கள். இன்னொருவனின் நாக்குக்கு கத்தி. இந்த கொடூர கூத்துகளுக்கு முடிவு கட்டி, பூனத்தை எப்படி கைபிடித்தார் ஜீவா? க்ளைமாக்ஸ். அப்போது இருவரும் பேசிக் கொள்ளும் கடைசி டயலாக், மறுபடியும் திரைவாணனுக்கு ஒரு ஷொட்டு வைக்கிறது.
ஏன் சார், ரயில்தான் இவ்ளோ நேரம் நின்னுச்சே. அப்பவே ஏறாம ஓடும் போது ஏறுறீங்களே? இந்த கேள்விக்கு "நான்தான் இந்த படத்தோட ஹீரோ. இந்த பில்டப் கூட இல்லேன்னா எப்படி?" என்கிறார் ஜீவா. இந்த நக்கலை படம் நெடுகிலும் சிதற விட்டிருக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் தமிழ்ப்படம் மாதிரி இன்னொரு ஸ்பூஃப் டைப் படமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது இவர்களின் ரவுசு. போதும் போதாததற்கு வடிவேலுவும் இருக்கிறாரா? முதல் பாதியில் பந்தாடுகிறார்கள் நம்மை. இரண்டாம் பாதி ஆக்ஷன் ரசிகர்களுக்கு. கேன்டீனுக்கு போனால் கூட கிடுகிடுக்கிறது சவுண்ட்!
கலகலப்பு, கைகலப்பு என்று இரண்டு ஏரியாவிலும் பிளாட் போட்டு குடியிருக்கிறார் ஜீவா. அதற்காக எம்ஜிஆர் லெவலுக்கு பில்டப் செய்வதை காமெடியாக கூட ரசிக்க முடியவில்லை ஐயா.
முகத்தில் வழியும் மென்சோகத்துக்கும், கதைக்கும் ஏகப்பொருத்தம் என்பதால் பூனம் பாஜ்வா சும்மா நின்றாலே நடிக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ரசிகர் மன்றம் வைத்து கொண்டாடுகிற அளவுக்கு மனதில் இடம்பிடிக்கவில்லை பொண்ணு.
சபிக்கப்பட்ட முட்டாள் வில்லன்கள் வரிசையில் மேலும் ஒருவர். ஜே.டி.சக்கரவர்த்தி. அவ்வளவு பலமான கூட்டத்துக்குள் நுழைகிற கருப்பு ஆட்டை கண்டு பிடிக்க கடைசி ரீல் வரை பொறுமை காக்க வேண்டியிருக்கிறதே? நல்லவேளை, காட்டுக்கூச்சல் போடாமல் கண்ணியம் காத்திருக்கிறார். பாராட்டலாம்.
இடைவேளைக்கு பின்பு மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அதனாலேயே நமுத்துப் போகிறது வடியின் கடி! ஆனால் முன்பாதியில் ஜீவாவிடம் சிக்கிக் கொண்டு இவர் தவிக்கிற தவிப்பில் தவுல் கிழிகிறது.
எதையாவது உருட்டிக் கொண்டேயிருக்கிறார் டி.இமான். பாடல்களும் சரி, பின்னணியும் சரி, ரொம்ப ரொம்ப ஸாரி! ஒளிப்பதிவில்லை வித்தையில்லை. அதே நேரத்தில் உறுத்தலும் இல்லை.
வடிவேலு என்ற பக்க(ர) வாத்தியமும், திரைக்கதை என்ற துக்கடாவும் இருப்பதால் களைகட்டியிருக்கிறது கச்சேரி!