என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 13 மார்ச், 2010

நித்தியானந்தன் - ரஞ்சிதா ஆபாசக் காட்சிகள்: சட்டம் என்ன சொல்கிறது? ஓர் ஆய்வும் சட்டங்களும்


திருவண்ணாமலை ராஜசேகர் என்ற நித்தியானந்தனும், ரஞ்சிதா என்ற திரைப்பட நடிகையும் பங்கேற்ற காட்சித் தொகுப்புகள் பலதரப்பிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தினாலும் முக்கியமான சில பார்வைகள் தவறிப்போயின. அந்தக்காட்சியில் இடம் பெற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் வயது வந்த இருவரது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை சட்டம் யாருக்கும் வழங்கவில்லை என்பதை பலரும் உணரவில்லை.ஆபாசம் நிறைந்த அந்தக் காட்சிகளை தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருடைய வீட்டிற்கும் அனுப்பிய ஊடகங்கள் குறித்து தேவையான அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை. இளவயதுடையோர் உள்ளிட்ட பார்வையாளர்களின் மனதை பாதிக்கக்கூடிய அந்த காட்சிகளை ஒலி-ஒளிபரப்புவதற்கு சட்டம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படவில்லை.



தற்போது, காலம் கடந்தேனும் இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வழக்கின் விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.

எனினும், இந்த விவரம் குறித்து சில சட்டப்பார்வைகளை பரிசீலிப்போம்.

இந்திய தண்டனைச் சட்ட(Indian Penal Code)த்தின் பிரிவு 292 என்ன சொல்கிறதென்று பார்ப்போம்:
ஆபாச புத்தகம், துண்டு வெளியீடு, தாள், சித்திரம், ஓவியம், உருவமைப்பு அல்லது உருவம், அல்லது வேறு ஆபாசப்பொருள் எதையாகிலும் விற்கிற, வாடகைக்கு விடுகிற, விநியோகம் செய்கிற பொதுமக்களுக்குக்க காட்சியாக வைக்கிற, அல்லது வேறெந்த முறையிலேனும் புழக்கத்திற்கு விடுகிற, அல்லது விற்பனை, வாடகை, விநியோகம், பொதுக்காட்சி, அல்லது புழக்கத்தின் பொருட்டுச் செய்கிற ...
...எந்தச் செய்கையையும் செய்கின்ற, செய்ய முனைகின்ற எவருக்கும் மூன்றுமாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.

இ.த.ச. பிரிவு 509ன் படி:

ஒரு பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் பேசுபவர்களை, ஒலி எழுப்புபவர்களை, சைகை செய்பவர்களை, அல்லது ஏதேனும் பொருளை காட்டுபவர்களை  பெண்களின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை ஓராண்டு சிறைத்தண்டனைக்கோ அல்லது அபராதத்திற்கோ அல்லது இவை இரண்டுக்குமோ ஆட்படுத்தலாம்.

பெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்டம், 1986 (Indecent Representation of Women (Prohibition) Act, 1986) பிரிவு 6 மற்றும் 7 ஆகியவற்றின்கீழ், ஒரு பெண்ணை உடல்ரீதியாகவோ, வேறு ரீதியாகவோ கண்ணியக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளிட்ட எதையும், அந்த பெண்ணை சிறுமைப்படுத்தும் நோக்கில் வெளியிடுவோருக்கு அவர் அக்குற்றத்தை முதல் தடவையாக செய்தால் இரண்டு ஆண்டுகளும், மறுமுறையும் அதே குற்றத்தில் அவர் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூடுதலாக இரண்டாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) -இன் பிரிவு 67 இவ்வாறு கூறுகிறது:

பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்.

பொதுவாக (தமிழ்) கலாச்சாரத்தின் காவலர்களாக தங்களை கருதிக்கொள்பவர்கள் பெண்களையும் அதிலும் குறிப்பாக தமிழரல்லாத பெண்களையும், பிற மொழியினரையுமே குறிவைத்து தம் அரசியலை நிர்ணயிக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் அறம் சார்ந்த உளவியலுக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் பணியில் தமிழர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்போது அவர்களை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு தேவையான சட்டப்பிரிவுகளும் குறித்து தரப்பட்டுள்ளது!

கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?