சென்னையில் புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை திறந்து வைத்தார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ரோசய்யா, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.சட்டசபை வளாகத்திற்குள் நடப்படும் மரக்கன்றுகளை அவர்கள் தொட்டு வழங்கிய பின், சட்டசபை வளாகத்தை பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர்கள் சுற்றிப் பார்த்தனர்.படங்கள் இணைப்பு.
மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜெய்பால் ரெட்டி, குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, ஜி.கே.வாசன், அழகிரி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக தலைமைச் செயலர் ஸ்ரீபதி உட்பட திரளான வி.ஐ.பி.,க்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜெய்பால் ரெட்டி, குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, ஜி.கே.வாசன், அழகிரி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக தலைமைச் செயலர் ஸ்ரீபதி உட்பட திரளான வி.ஐ.பி.,க்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவையொட்டி, வரலாறு காணாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் 5,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார், விமான நிலையம் முதல், விழா மேடை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விழாவிற்கு வந்த அனைவரும், மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்,
“ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர் சுதந்திர இந்தியாவின் இயக்கங்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெருந்தலைவர்களாக திகழ்ந்தனர். அவர்களைப்போல் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர். ஆகியோரும் சிறந்த தலைவர்களாக திகழ்ந்துள்ளனர். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நம் எல்லோருக்கும் எம்.ஜி.ஆர். நல்ல உதாரணமாக திகழ்ந்தார்
தமிழக மக்களாகிய உங்களை மீண்டும் ஒருமுறை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி எழுப்பி இருக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சட்டசபை மற்றும் தலைமை செயலகத்துக்கு பெருமை சேர்த்த ஒவ்வொரு நபர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
நூற்றாண்டு கால பாரம்பரியம் மிகுந்ததாக உள்ள முந்தைய தமிழக சட்டசபை, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குடிமகன்கள், குடிமகள்களை கண்டுள்ளது. குறிப்பாக ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர் சுதந்திர இந்தியாவின் இயக்கங்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெருந்தலைவர்களாக திகழ்ந்தனர்.
அவர்களைப்போல் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களும் தேசத்துக்காக மிகப்பெரிய அளவில் சேவையாற்றியுள்ளனர். தமிழக முன்னேற்றத்துக்கும், இந்தியாவின் மேம்பாட்டுக்கும் இவர்கள் ஒவ்வொருவரும் அரும்பாடுபட்டனர்.
பசுமைப்புரட்சிக்கு சி.சுப்பிரமணியம், தமிழகத்தில் தொழில் மேம்பாட்டுக்கு ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் பங்களித்தனர். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் தேசத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இன்று அவரது திட்டத்தை மேம்படுத்தி நாடு முழுக்க செயல்படுத்தி வருகிறோம்.
தற்போது முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நான் நின்று கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான முடிவை தமிழக அரசியலில் மாபெரும் மனிதராக விளங்கும் இவரால்தான் எடுக்க முடியும்.
கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம், அறிவு போன்றவற்றை பெறுவதால், மத்தியில் ஆட்சி நடத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய ஆதாயங்களை அடைந்துள்ளது. அடிக்கடி நானும் அவரது ஆலோசனைகளை கேட்டு பெறுவதுண்டு.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் கலைஞர் கருணாநிதி இருக்கிறார். எனவே தேச விவகாரங்களில் அவரது அனுபவம், ஞானம் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதால் நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் தலைமையில், இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி, நிலப்பட்டா வழங்குவது போன்றவற்றில் புதிய உயரத்தை தமிழகம் எட்டியுள்ளது.
சக்தி மிகுந்த ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழகம் ஒரு கேந்திரமாக இருக்கிறது. மிக நவீன ஆடை ஆலைகள் இங்கு உள்ளன.
நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், தரமான கல்வி வழங்குவதிலும் கண்ணைக்கவரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மிகுந்த பொறுப்பு மற்றும் திறமை வாய்ந்த மாவட்ட-நகராட்சி நிர்வாகங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையும் பாரம்பரியமும் தமிழகத்துக்கு உண்டு. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்தான் முன் உதாரணம்.
இதை நான் சொல்வதற்கு, நம் கண் முன்பு எழுந்து நிற்கும் இந்த புதிய கட்டிடம் காரணமாகும். பழைய சட்டசபை 1937 ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. மிகப்பெரிய நாடாளுமன்றவாதிகளை அது உருவாக்கியுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்திய பெரிய தலைவர்களின் வீடாக அது திகழ்ந்தது. இங்குள்ள எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகத்தினரும்தான் தமிழகத்தின் மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர்கள்.
வேளாண்மை, தொழிற்சாலை, கல்வி ஆகியவற்றில் வளர்த்த மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு, இங்குள்ள தரமான அரசியல் தலைமைகளும், திறமையான நிர்வாக இயந்திரமும்தான் காரணம்.
தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்ற உள்ளாட்சி அமைப்புகள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகப்பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் நான் பாராட்டுகளை கூறிக்கொள்கிறேன். இந்த பாரம்பரியத்தையும், பெருமையையும் அப்படியே நாம் விட்டுவிடக்கூடாது.
பல மாற்றங்களை கொண்டு வரும் நாடாக இந்தியா இருக்கிறது. தற்போது தரமான மாற்றமும், அதிகபட்ச முன்னேற்றமும் தேவைப்படுகிறது. நாம் வித்தியாசமான எண்ணங்களோடு பல விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்.
மாற்றங்களை கொண்டு வருவதற்கு தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புகிறேன். கல்வி கற்றவர்கள், திறமையானவர்கள், சமத்துவ சமுதாயம் ஆகியவையே தற்போது நமக்கு அவசியம்.” எனத் தெரிவித்தார்.