இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே நடைமுறைப்படுத்த முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ்வுக்குக் கூறியதாக பத்திரிகைச் செய்தியொன்று தெரிவிக்கின்றது. இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியதாக அவரது கட்சியின் முக்கியஸ்தரொருவர் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார்.
ஹக்கீம் கூறியது முற்றுமுழுதான உண்மை. இன்றைய பாராளுமன்றத் தேர்தலில் பிரதான அணிகளாக மூன்று அணிகள் களத்தில் நிற்கின்றன. இம் மூன்று அணிகளுக்கும் தலைமை தாங்குபவர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே சிங்கள மக்களின் மத்தியில் மிகப் பெருமளவு ஆதரவு உண்டு. மற்றைய இருவரும் சிங்கள மக்களால் ஏறக்குறைய நிராகரிக்கப்பட்டவர்கள் என்றே கூறலாம்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் தீர்வு காணலாமேயொழிய அதற்குப் புறம்பான எந்தத் தீர்வும் எக்காலத்திலும் சாத்தியமாகாது. ஐக்கிய இலங்கையில் தீர்வு காண்பதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது. இந்த ஆதரவுடன் நடைமுறைக்கு வரும் தீர்வு தான் நின்று நிலைக்க முடியும். எனவே, சிங்கள மக்களின் ஏகப்பட்ட ஆதரவைப் பெற்றிருப்பவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமானவர் என்ற கருத்து அர்த்தபூர்வமானது.
நிருபமா ராவ்வுக்கு இக்கருத்தைக் கூறிய ரவூப் ஹக்கீம் உள்ளூர் அரசியலில் அதற்கு முரண்பாடான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது நியாயப்படுத்த முடியாததாக உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தனும் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். அரசியல் தீர்வை அடைவதற்காக இரண்டு கட்சிகளும் கூட்டாகச் செயற்படப் போவதாக இருவரும் அப்போது அறிவித்தார்கள். கூட்டுச் செயற்பாட்டுச் சிந்தனை அந்த ஊடகவியலாளர் மகாநாட்டுடன் முடிந்துவிட்டது. எனினும், இப்போது நிருபமா ராவ்வுக்குக் கூறிய கருத்தை சம்பந்தனுக்கு அப்போது ஹக்கீம் கூறிச் சரியான திசையில் அவரை வழிநடத்தியிருக்கலாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரம் இனப் பிரச்சினைக்கான தீர்வை நடைமுறைக்குக் கொண்டுவர முடியும் எனக் கூறும் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தைத் தோற்கடிக்க முயற்சிப்பது மிகப்பெரிய முரண்நகையாக உள்ளது. இனப் பிரச்சினை தீர்க்கப்படுவதை ரவூப் ஹக்கீம் விரும்பவில்லையா என்ற கேள்வி இதிலிருந்து எழுகின்றது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குச் சரியான மார்க்கம் எது என்பது தெரிந்திருந்தும் சில தலைவர்கள் அதற்கு முரணான வழியில் செல்கின்றார்கள் என்பதற்கு ரவூப் ஹக்கீம் தெரிவித்த மேற்படி கருத்தும் அவரது அரசியல் நிலைப்பாடும் உதாரணங்களாக உள்ளன. தலைவர்கள் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்ற போதிலும் மக்கள் சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும்.
இனப் பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதால் தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிக்கப்படுபவர்கள் மக்களே என்பதால் அவர்கள் தீர்வுக்குப் பொருத்தமான முடிவை எடுப்பதே விமோசனத்துக்கான வழி.
- தினகரன் தலையங்கம்