நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 18 பேர் கொலையுண்ட சம்பவத்தில், கொலையாளிகளுடன் நளினியும் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அரசு தெரிவித்துள்ளது ராஜீவ் கொலை தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், கொலையாளிகளுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார். இதன் மூலம் அவர் கொடூரமான குற்றத்தைப் புரிந்துள்ளார்.
சிறையில் அவர் பட்ட மேற்படிப்பும், பட்டயப் படிப்பும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது மனப்போக்கு மாறியுள்ளதாகக் கருதமுடியாது. இதுவரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. தனது செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால், அவரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக நளினியின் தாயார் உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால், இதுதொடர்பான வழக்கில் நளினியின் தாயாரும், சகோதரரும் கூட சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நளினியின் தாயார் சென்னையிலுள்ள ராயப்பேட்டையில் வசிக்கிறார். நளினி விடுதலை செய்யப்பட்டால் அவரது தாயாருடன் அந்தப் பகுதியிலேயே வசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி அதி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. அமெரிக்கத் தூதரகமும் அருகிலேயே உள்ளது.
விடுதலைக்குப் பிறகு நளினி இந்தப் பகுதியில் தனது தாயாருடன் வசித்தால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளதால், தன்னை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
அவர் இந்திய தேசத்துக்கு எதிரான குற்றத்தை செய்துள்ளார். எனவே, 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதால் தன்னை விடுவிக்குமாறு அவர் கோருவதையும் ஏற்க முடியாது.
குற்றச் சூழல், குற்றத்தின் தன்மை ஆகியவற்றைப் பார்க்கும்போது, முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு பரிந்துரைக்க இது சரியான வழக்கல்ல என்று ஆய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏன் விடுதலை இல்லை? சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை தமிழக அரசு கவனமாக பரிசீலித்தது.
நளினியை முன் கூட்டியே விடுதலை செய்வதாலும், ராயப்பேட்டை பகுதியில் அவர் வசிப்பதாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்று நளினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையிலேயே அவரை விடுதலை செய்ய நன்னடத்தை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மண்டல நன்னடத்தை அதிகாரி இந்த இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து முன்கூட்டியே விடுதலைக்குப் பரிந்துரைக்க இது சரியான வழக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல், உளவியல் நிபுணரின் அறிக்கையிலும் நளினியை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான முடிவான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்ற ஆலோசனைக் குழுவின் பரிந்துரை ஏற்கப்படுகிறது. நளினியின் மனுவை நிராகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது